மஞ்சக்கொல்லை விவகாரம்: பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக திருமாவளவன் சாடல்

By செய்திப்பிரிவு

கடலூர்: “வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில்தான் பாமகவினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. கைது நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாமென த.வா.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளையேற்று மஞ்சக்கொல்லை சிறுத்தைகள் இரு சமூகங்களுக்கான நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

ஆனால், அடுத்து 15.10.2024 அன்று கொடிக் கம்பத்தை அடியோடு அறுத்தெடுத்துக் கொண்டு போய்விட்டனர். அது குறித்தும் விசிக தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவானது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், 01.11.2024 அன்று மஞ்சக்கொல்லை அருகேயுள்ள உடையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பையொட்டி மஞ்சக்கொல்லை கிராமத்தைச்சார்ந்த முத்துக்குமார், அரி உள்ளிட்ட பத்து பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். உடையூர் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர், அவர்களிடம் 'ஊரைத் தாண்டிப்போய் குடியுங்கள்' என்று சொல்லியுள்ளனர்.

அது வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது உடையூர் தலித் இளைஞர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். அதனைக் கவனித்த உடையூர் தலித் மக்கள் ஓடிவந்து அவர்களைத் தடுத்துள்ளனர். போதையிலிருந்த அவர்களில் மஞ்சக்கொல்லையைச் சார்ந்த செல்லத்துரை என்பவரைத் தவிர மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். தனியே சிக்கிக்கொண்ட அவரைத் தலித் இளைஞர்கள் சிலர் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார்.

இதனையொட்டி தலித் இளைஞர்கள் ஐந்து பேரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். எனினும், அத்தாக்குதலைக் கண்டித்து மஞ்சக்கொல்லையைச் சார்ந்த வன்னியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பாமகவும் வன்னியர் சங்கமும் தலையிட்டு இரு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினர். ‘அவன் இவன்’ என்று பாமக மாவட்ட செயலாளர் பேசி, தமது கட்சியினரின் சாதி உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி் அவர்கள் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக அப்பாவி வன்னியர்களைத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். அவர் பேசிய பின்னர் தான், ஒரு பெண்மணி கடப்பாரையால் விசிக கொடிக் கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்திருக்கிறார்.

இது தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பாக, சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவேதான், புவனகிரியில் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஓரிருவர் பாமக'வினரைப் போலவே வெறுப்பு அரசியலுக்கு இரையாகும் வகையில் பேசியது ஏற்புடையதில்லை. அது வன்மையான கண்டனத்துக்குரியது. அவ்வாறு பேசியதற்காக சிறுத்தைகளின் மாவட்டச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் பலர் மீது வழக்குப் பதிவு செய்து, 'செல்வி முருகன்' என்பவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

ஆனால், விசிக' வின் கொடியை அறுத்தது; பின்னர் கொடிக் கம்பத்தை அறுத்தது; அதன் பிறகு கம்பத்தின் பீடத்தை இடிக்க முயற்சித்தது; உடையூரில் தலித் இளைஞர்களைத் தாக்கியது; மஞ்சக்கொல்லையில் வன்முறையைத் தூண்டும் வகையில் பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் பேசியது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறை தான், விசிகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில்தான் பாமக'வினர் திட்டமிட்டே சமூகப் பதற்றத்தை உருவாக்குகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்னும் பெயரில், இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் ஈடுபடுவோருக்கு துணை போய்விடக் கூடாது.

சட்டம் - ஒழுங்கு என்னும் பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. விசிக கொடியை அறுத்தது , கம்பத்தை வெட்டியது, பீடத்தை உடைக்க முயற்சித்தது, தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றில் தொடர்புடைய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சார்ந்த அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்