கடலூர் பாமக - விசிக பிரச்சினையில் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அன்புமணி குற்றச்சாட்டு

By ந. சரவணன்

சோளிங்கர்: “கடலூர் பாமக - விசிக மோதல் பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, அரசியல் செய்ய பார்க்கிறார். பாமக - விசிக இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை முன்பு கருணாநிதி செய்தார். தற்போது, மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவ.7) கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக மோதல் விவகாரத்தில், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு ஆறுதல் கூற சென்ற பாமக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், இந்தச் சம்பவத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் திராவிட மாடலா? இதுதான் முதல்வரின் நிர்வாக லட்சணமா? இதுதான் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றி, விசிக - பாமக மோதலை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார். பாமக - விசிக இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை முன்பு கருணாநிதி செய்தார். தற்போது, மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

தமிழக காவல் துறையும், மோதலுக்கு காரணமானவர்களை விட்டு விட்டு, பாமக நிர்வாகிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதான் காவல் துறையின் லட்சணமா? காவல் துறை தன் கடமையை சரியாக செய்ய வேண்டும். இது இப்படியே சென்றால் பாமக வேடிக்கை பார்க்காது. மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்.

ராணிப்பேட்டை மாவட்டம் புதிய மாவட்டமாக உருவான பிறகு எந்த விதமான வளர்ச்சி இங்கு இல்லை. இங்கு மருத்துவக் கல்லூரி மற்றும் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சோளிங்கரில் புறவழிச்சாலையை கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைவிடுத்து வருகிறோம்.

பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். இதை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் பலமுறை கூறிவிட்டோம். ஆனால், நடவடிக்கை தான் இல்லை. பனப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை வந்தால் 80 சதவீதம் வேலை வாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். ஒசூரில் இது போல சிப்காட் தொழிற்சாலை கொண்டு வரப்பட்டு அங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் வேலை வாய்ப்பு வழங்கினர். அந்தநிலை இங்கு வரக்கூடாது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தெலங்கானாவில் 30 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, தமிழகத்தில் நடத்த முடியாதா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை. கேட்டால் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனக்கூறுகிறார்கள். மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டுமென்றால் ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? நிர்வாக திறமை இல்லையா?

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. காவல் துறையினர் ஒத்துழைப்புடன் தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. போதை பொருள் விவகாரத்தில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். வெறும் கண்துடைப்புக்காக மட்டும் அல்லாமல் போதை பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார். அப்போது, முன்னாள் மத்திய இணையமைச்சர் என்.டி.சண்முகம் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்