‘‘மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்’’ - தொண்டர்களுக்கான கடிதத்தில் ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் பணியை லட்சியமாக கொண்டு இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: நம் உயிருடன் கலந்திருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்வதற்காக உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை அக்டோபர் 22-ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறிவித்தேன். அதனைத் தொடர்ந்து கலைஞரின் உடன்பிறப்புகளாகிய உங்களிடமும் மடல் வாயிலாகத் தெரிவித்தேன்.

“நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கவிருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்" என்று உங்களில் ஒருவன் மடலில் குறிப்பிட்டிருந்தேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நம் உயிர்நிகர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நமக்குக் கற்றுத்தந்துள்ள ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படைப் பாடம். அதன்படியே நவம்பர் 5, 6 இரண்டு நாட்களிலும் கோவை மாவட்டத்தில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளப் பயணமானேன்.

மேற்கு மண்டலத் திமுகவில் ஓட்டை விழுந்துவிட்டதுபோல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், இலட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட கழகத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை, கோவையில் தரையிறங்கியதுமே உணர முடிந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, களஆய்வின் முதல் நிகழ்வான எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைப்பதற்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது, 6 கிலோமீட்டர் நெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்.

கோவையில் உள்ள மூன்று திமுக மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் பொதுமக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் - இளைஞர்கள் திரண்டு நின்று வரவேற்பளித்தனர். வழிநெடுக மக்களின் முகம் பார்த்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான என்னைப் பார்த்து மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி என்பது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு முகத்தில் பிரதிபலித்தது.

புன்னகைத்து, கையசைத்து, “அடுத்ததும் உங்க ஆட்சிதான்” என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். தாய்மார்கள் பலரும் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அழைத்து வந்து குடும்பமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கையசைத்தனர். அந்தக் குழந்தைகளின் முகம் கண்டு நானும் மனதளவில் குழந்தையானேன்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், 2009-ஆம் ஆண்டு கோவையில் டைடல் பூங்காவை நம் உயிர்நிகர் முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் என்ற முறையில் டைடல் பூங்கா அமைவதற்கான பணிகளை உங்களில் ஒருவனான நான் அக்கறையுடன் கவனித்து நிறைவேற்றினேன்.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. காரிடார் (ஓ.எம்.ஆர். சாலை) போல கோவையில் டைடல் பூங்கா பகுதி தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த இளைஞர்களின் வாழ்வுக்கு வளமான எதிர்காலத்தைக் கட்டமைத்துத் தரும் இடமாக இன்று உருவாகியுள்ளது. ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் அங்கே உருவாகியிருப்பதையும், கோவையையும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களையும் சேர்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதையும் கண்ட மனநிறைவுடன் எல்காட் நிறுவனத்தின் சார்பிலான புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அந்தத் துறையின் அமைச்சரும் பன்னாட்டு அளவில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிந்தவருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் பங்கேற்றேன்.

எல்காட் புதிய டைடல் பூங்காவின் கட்டமைப்பை உலகத் தரத்திற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான முறையில் அமைத்திடத் துணை நின்றவர் பொதுப்பணித் துறை அமைச்சரான எ.வ.வேலு. நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுடன், வேலுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். டைடல் பூங்காவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்கூட்டியே பதிவு செய்து, தங்கள் பணியினைத் தொடங்கி, இளைஞர்களுக்கு வேலைகள் வழங்க ஆயத்தமாயிருப்பதையும் அறிந்து கொண்டேன்.

அடுத்த நிகழ்வாக, கோவை மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களையும் சார்ந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலின்போது முன்வைத்த முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றும் நிகழ்வாக, மக்களின் நெஞ்சில் பால் வார்க்கும் நிகழ்வாக அமைந்தது.

தமிழ்நாடு வீட்டு வசதித் திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்ட பகுதிகளில், அதற்கான விலக்களிக்கும் ஆணைகள் கிடைக்கப் பெறாமல் இருந்தவர்கள் தங்களின் நீண்டகால பரிதவிப்பை மனுக்களாக அளித்து வந்தனர். அவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்த உங்களில் ஒருவனான நான், முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சிறப்புப் புகார் பெட்டிகள் அமைத்து, மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, 4-10-2024 அன்று உரிய அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதுமிருந்தும் கோரிக்கை வைத்த மக்களுக்குப் பெரும் நிம்மதி ஏற்படும் வகையிலான இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம் வடக்கு வட்டத்திலும், தெற்கு வட்டத்திலும் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, 5,386 குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு உருவானது. தங்களுக்குரிய நிலத்தை விற்கவும் வாங்கவும் முடியாமல் பல ஆண்டுகளாகத் தவித்த மக்களுக்குத் திராவிட மாடல் அரசு வழங்கிய நிம்மதிப் பரிசுதான் இந்த நில எடுப்பு விலக்களிப்பு ஆணை.

அதனை வழங்குகிற விழாவில் துறையின் அமைச்சர் சு.முத்துசாமியும் பங்கேற்று, எவ்வளவு அக்கறையுடன் இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து, உரிய சட்டமுறைகளின்படி நிறைவேற்றினோம் என்பதை விளக்கினார். விலக்களிப்பு ஆணைகளைப் பெற்றுக் கொண்ட மக்களின் நன்றி அவர்களின் கண்களில் துளிர்த்ததைக் கண்டேன்.

காலை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு மதிய உணவுக்காக சர்க்யூட் ஹவுஸ் செல்லும்போது, கோவையைச் சேர்ந்த தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு ஒன்றை நம்பிக்கையுடன் அளித்தனர். அதைப் படித்துப் பார்த்த பிறகு, மாலையில் தங்க நகை உற்பத்தியாளர்கள் பணி செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களின் பட்டறைகளைப் பார்வையிட்டேன். விலை உயர்ந்த பொருளான தங்கத்தை, திறன்மிகுந்த வேலைப்பாடுகளுடன் மிகச் சிறந்த அணிகலன்களாக மாற்றும் திறமை பெற்ற அவர்களின் பணியிடங்கள் மிக மிக எளிமையானதாக - நெருக்கடி மிகுந்ததாக இருப்பதைக் கண்டேன்.

தங்கள் தொழிலுக்கேற்ற நவீன வசதியான இடம் வேண்டும் என்பது அவர்களின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. அது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து உலக அளவில் தங்க நகைகள் தயாரிப்பில் முக்கிய மையமாக விளங்கும் கோவைக்குக் குறிச்சியில் உள்ள தொழிற்பேட்டையில் 126 கோடி ரூபாய் செலவில் தொழில் வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டேன். குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்காக விடுதிகளையும் நேரில் ஆய்வு செய்தேன்.

அரசு சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுப் பணிகளுடன், இந்த ஆட்சி அமைவதற்கு அயராத உழைப்பைத் தந்த கழகத்தினரைச் சந்தித்து அவர்களுடைய செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பணி நவம்பர் 6 அன்று மாலையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கழகத்தின் உள்கட்சித் தேர்தல் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாநகர - நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் எனக் கோவையின் 10 தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாகிகளுடனான கலந்தாய்வினை உங்களால் கழகத் தலைவர் பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான் நடத்தினேன்.

கழகத்தின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை முன்கூட்டியே கோவைக்குச் சென்று கழகத்தினருடனான கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்ததுடன், நிர்வாகிகள் அனைவரையும் மினிட்ஸ் புத்தகங்களையும் எடுத்துவரச் செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றியவர் கோவை மாவட்டத்தைக் கழகத்தின் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கோவை மாவட்டத்தின் இரண்டு நாள் நிகழ்வுகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று ஏற்பாடு செய்திருந்த விதம், எடுத்துக்கொண்ட அக்கறை, செயலாற்றலில் வெளிப்பட்ட துல்லியம் இவை அனைத்தும் நமக்கு எந்தளவு மகிழ்ச்சி தருகிறதோ, அதே அளவுக்கு அரசியல் எதிரிகளுக்கு அதிர்ச்சியையும் தருகிறது. அதனால்தான் அவரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் எனச் சதிவலை விரித்தனர். சட்டப்போராட்டத்தில் வென்று, சிறை மீண்ட சிங்கமெனக் களம் கண்டு, கழகத்தினர் வியந்திட - களத்தில் எதிர் நிற்போர் வியர்த்திடச் செயல் புயலாகத் தன் பணியினைச் சிறப்பாகச் செய்திருந்தார், தனக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடைகளை உடைத்து 'கம்பேக்' கொடுத்திருக்கும் செந்தில் பாலாஜி.

கழக நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கோரிக்கைகள், களநிலவரங்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டதுடன், அவரவர் பகுதியில் ஆற்றிய செயல்பாடுகளை மினிட்ஸ் புத்தகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தினரை அன்புடன் ஒருங்கிணைத்து, மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் உறுதுணையாக நிற்கும்போது அங்கே கழகமும் வலிமையாக இருக்கிறது, களத்தில் வெற்றியும் உறுதியாக அமைகிறது. இதற்குச் சாட்சியமாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வடக்கு நகரக் கழகச் செயலாளர் முகமது யூனுஸ் என்னிடம் வழங்கிய மினிட்ஸ் புத்தகம் இருந்தது.

46 நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருப்பதைப் பதிவு செய்திருந்தார். அந்த ஒன்றியத்தில் தி.மு.கழகம் தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, சூலூர் பேரூர் கழகச் செயலாளார் கௌதமன் அவர்கள் 57 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, மாவட்ட - ஒன்றிய மற்றுமுள்ள அமைப்புகள் குறிப்பிட்ட கால அளவில் அமைப்புக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பொதுஉறுப்பினர்கள் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களை நடத்தவேண்டும் என்பதை ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழக நிர்வாகிகளிடம் வலியுறுத்தி, களப்பணிகளை முடுக்கிவிட்டேன். கலந்துரையாடல் போல அமைந்த இந்த கலந்தாய்வுக் கூட்டம் கழக நிர்வாகிகளுக்கு உற்சாகத்தைத் தந்த நிலையில், உங்களில் ஒருவனான என்னுடன் ஒவ்வொருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தனர்.

என்னுடைய விருப்பமும் அதுதான். அதனால், ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக் கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.கழக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின் 10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்.

நவம்பர் 6-ஆம் நாள் அரசு திட்டங்கள் தொடர்பான கலந்தாய்வு நிகழ்வாக கோவையில் புதிய நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கோவைக்குப் பல முறை வந்துள்ளேன். நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக மூன்று முறை வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன், மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில்தான் தொடங்கி வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் கள ஆய்வுப் பணி என்பதும் கோவையில்தான் தொடங்கியுள்ளது என்பதை அந்த நிகழ்வில் குறிப்பிட்டு, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு தகவல்தொழில்நுட்பப் பூங்கா, உயர்மட்ட மேம்பாலச் சாலை நீட்டிப்பு, யானைகளால் பயிர்ச்சேதங்களைத் தவிர்த்திட நவீன வேலி, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு விளக்கமாக உரையாற்றினேன்.

சென்னையில் அண்ணா பெயரில் நூலகமும், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைந்திருப்பதுபோல, கோவையில் அமையும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் பெரியார் பெயரில் அமையும் என்பதைத் தெரிவித்து, 2026 ஜனவரியில் நூலகமும் அறிவியல் மையமும் திறக்கப்படும் என்பதையும் காலக்கெடுவுடன் அறிவித்தேன்.

கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளாம் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் களஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவம்பர் 9, 10 தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப் பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்