சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நோயாளி, மருத்துவர், மருந்து, நோயாளியின் அருகில் இருக்க வேண்டிய துணை என நான்கும் சேர்ந்ததுதான் மருத்துவம் என்கிறார் திருவள்ளுவர். இந்த நான்கிலே மிக முக்கியமானதாக விளங்குவது மருத்துவர். ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதன் காரணமாக 'மருத்துவம் இல்லை' என்ற அபாயகரமான நிலையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்த நிலை மாறி, இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதுபோல், மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வருகிறது. அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நான் பலமுறை அறிக்கைகள் விடுத்தும், அதை தி.மு.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18,000 மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தற்போது பணியில் உள்ள 1,000 மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர உள்ளதால், பற்றாக்குறை மருத்துவர்களின் எண்ணிக்கை 6,000-ஆக அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த ஆண்டு ஓய்வுபெறும் மருத்துவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில், கிட்டத்தட்ட 35 விழுக்காடு மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக, தற்போது பணியில் இருக்கின்ற மருத்துவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டதன் விளைவாக, அவர்கள் சோர்வு அடைந்துள்ளதாகவும், அவசர சிசிக்சைகள் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் பிரசவ அறை மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான தர உறுதி நிர்ணயத் திட்ட (LaQshya) வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,000 மகப்பேறு சிறப்பு மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் வெறும் 850 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும், இதன் காரணமாக மகப்பேறு மருத்துவர்கள் வேலைப்பளுவினால் அவதிப்படுவதாகவும், பிற மருத்துவ பிரிவுகளிலும் இதே நிலைதான் என்றாலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மகப்பேறு மருத்துவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.
உதாரணமாக, பிரசவ அறை மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்குகளுக்கான தர உறுதி நிர்ணயத் திட்ட (LaQshya) வழிகாட்டுதல்களின்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூன்று மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு (cEMONC) 17 மகப்பேறு மருத்துவர்கள் தேவைப்படுகின்ற. நிலையில், வெறும் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலைதான் அனைத்து மாவட்டங்களிலும் நிலவுகிறது.
இதேபோன்று, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆயிரக்கணக்கான பேராசிரியர், இணைப் போராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மருத்துவர்களுக்கான பதவி உயர்வு என்பது பல ஆண்டுகளான நிலுவையில் உள்ளதாகவும், பல மருத்துவர்கள் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய, தரமான, உடனடி மருத்துவம் அளிக்கப்படுவதில்லை. மருத்துவ ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவ மாணவர்களின் கல்வித் தரம் பாதிக் பாதிக்கப்படுகிறது. பதவி உயர்வு, ஊதிய உயர்வு இல்லாமல் மருத்துவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது என்பது மக்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம்.
மொத்தத்தில், மருத்துவர்களின் வாழ்க்கையோடும், மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் தி.மு.க. விளையாடிக் கொண்டிருக்கிறது. மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்புவது மற்றும் மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிப்பது போன்றவற்றை விரைவுபடுத்த வலியுறுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. தி.மு.க. அரசின் இதுபோன்ற மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது
எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மருத்துவர்களுக்கான பதவி உயர்வினை அளிக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago