மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிற்கு முழுவிபர அறிக்கை: விஜயபாஸ்கர் தகவல்

By எஸ்.சீனிவாசன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய சுகாதாரத் துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் உடனே பூர்த்தி செய்வதாக, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு இன்றைக்குள் அறிக்கை அனுப்பப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை அருகே தோப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில நிபந்தனைகள் மத்திய சுகாதாரத் துறையால் விதிக்கப்பட்டன. உடனே கட்டுமான பணிகளை துவங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதை நிறைவேற்றும் வகையில், 2 நாட்களாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் அதிகாரிகள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்  ஆய்வு செய்தனர்.

மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வீட்டுவசதித் துறை, மருத்துவத் துறை உயர் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து ஆலோசனை நடத்தினர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் அனைத்து நிபந்தனைகளும் உடனே நிறைவேற்றும் வகையில் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “மத்திய அரசு 5 நிபந்தனைகளுடன் தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க கடிதம் அனுப்பியுள்ளது. புதுடெல்லி உள்ளிட்ட 8 இடங்களில் எய்ம்ஸ் செயல்படுகிறது. வளர்ச்சிபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் தமிழகத்திற்குத்தான் முதல் முதலாக எய்ம்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயன்படும் வகையில், புதுடெல்லியில் தற்போது செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, அதே வசதிகளுடன் மதுரையில் அமைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 198.27 ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் அரசிடமே உள்ளது. இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. 4 வழிச்சாலையுடன் இணைத்து செயற்கைகோள் நகருக்காக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை எய்ம்ஸ் வரை நீட்டிக்கப்படும். மேலும் 3 சாலைகள் இணைப்பில் உள்ளன. 20 மெகா வாட் மின்சாரம் வழங்க 2 இடங்களில் மின் நிலையம் அமைக்கப்படும். தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கேட்டுள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இப்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதிலிருந்து தனியாக குழாய் பதித்து எய்ம்ஸ்-க்கு தண்ணீர் வழங்கப்படும்.

நிலத்தடி நீரும் சுவையாக உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் இருபுறமும் தலா 30 அடிக்கு எந்த கட்டுமானமும் செய்யாமல் இருந்தால் போதும் என எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 4 ஏக்கர் மட்டுமே கட்டுமானத்திற்கு பயன்படுத்த முடியாது. இப்படி அனைத்து நிபந்தனைகளும் உடனே நிறைவேற்றும் வகையில்தான் உள்ளது. இது குறித்து ஏற்கெனவே அறிக்கை தயாராக இருந்தாலும், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு அளிக்கப்படும்.

இன்று மத்திய அரசிற்கு முழு விபர அறிக்கை அனுப்பப்படும். மதுரை எய்ம்ஸ் குறித்த திட்ட அறிக்கையை மத்திய அரசு தயார் செய்து வருகிறது. தமிழக அரசின் கடிதம் கிடைத்ததும், திட்ட துவக்கத்திற்கான அனுமதி கிடைத்ததும் விரைவாக பணிகள் துவங்கப்படும். மருத்துவத்தில் 4-ம் நிலை என்ற உயர் தரத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் 750 படுக்கைகளுடன் சிகிச்சை பிரிவு, செவிலியர் கல்லூரி, 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கான வசதி, 50-க்கும் மேற்பட்ட துறைகளின் மருத்துவ உயர் ஆராய்ச்சி மையங்கள் என பலவேறு வசதிகள் ஒரே கட்டமைப்பிற்குள் உருவாக்கப்படும்.

இவை ரூ.1,500 கோடியில் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். ஜைக்கா திட்டத்தில் ரூ.1,600 கோடியில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மேலும், தமிழகத்தில் மருத்துவ சிகிச்சையை உலக தரத்திற்கு எடுத்துச் செல்ல உலக வங்கி ரூ.2,685 கோடியை வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் வரும் பிப்ரவரி 2019-ல் மேற்கொள்ளப்படுகிறது. விபத்து சிகிச்சை, பயிற்சி, கட்டமைப்பு, மனநலத்துறையில் உலகத் தரத்திற்கு மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். செங்கல்பட்டில் ரூ.590 கோடியில் கட்டப்பட்டுவரும் தேசிய ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து வளாகத்தை விரைவில் பிரதமர் துவக்கி வைக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்