‘‘தமிழக மக்களின் பெருந்தன்மையை கொச்சைப்படுத்தாதீர்கள்!’’ - அதிர வைக்கும் உடல் உறுப்பு தான மோசடி: ஹிதேந்திரனின் தந்தை வேதனை

By நெல்லை ஜெனா

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களான அசோகன்- புஷ்பாஞ்சலி தம்பதியின் மகன் ஹிதேந்திரன். விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மிக அதிகஅளவில் அதிகரித்தது.

கடந்த சில ஆண்டுகளில் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் அதிக பாதுகாப்புடன் வேகமாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதை அவ்வப்போது ஊடகங்களும் செய்தியாக்கின. இதை மையப்படுத்தி சினிமாவும் வந்தன.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்கள், உடல் உறுப்புகள் தேவை உள்ளவர்களுக்கு அளிக்கும் கொடை பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது.

இறந்த பின்னரும் ஒருவரின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்படுவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கியது. இதன் எதிரொலியாக மூளைச்சாவு அடைந்தவர்கள் மட்டுமின்றி மற்ற வகையில் உயிரோடு இருப்பவர்கள் செய்யக்கூடிய உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்தது. இதுபோன்ற தானத்திற்காக பலர் தானாக முன் வந்து பதிவு செய்தனர்.

இந்த பெருமைக்கு பின்னால் பெரிய சிறுமை ஒளிந்திருப்பதும், பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதும், விதிமீறல்கள் நடப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடம் இருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. .

உறுப்பு மாற்று- திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குனர் பேராசிரியர். விமல் பண்டாரி இதை உறுதிப் படுத்தியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு பணக்கார நோயாளிகளே பெருமளவு பயன் பெற்றுள்ளனர்.

5310-க்கும் மேற்பட்ட இந்திய நோயாளிகள்,உறுப்புகளை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் மூலம் காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை வழங்காமல், வெளிநாட்டினருக்கு பல லட்சம் ரூபாய் பணத்திற்காக உறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு இதய மாற்றுக்காக மூளைச் சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்பட்ட இதயங்களில் 25 சதவிகிதத்தையும், நுரையீரல்களில் 33 சதவிகிதத்தையும் வெளிநாட்டினரே பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்கள் குறித்து ஹிதேந்திரனின் தந்தையும் மருத்துவருமான டாக்டர் அசோகன் தி இந்துவிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் ஏராளமானோர் உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்து காத்து கொண்டு இருக்கும் சூழலில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் வெளிநாட்டினருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து?

2008-ம் ஆண்டு எனது மகன் மூளைச்சாவு அடைந்தபோது, அவனது உடல் உறுப்புகள் தேவையப்படும் பிறருக்கு பயன்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தானம் செய்தோம். நாங்கள் மருத்துவர்கள் என்பதால் இந்த முடிவை எடுத்தோம். இது தமிழகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட மிகப்பெரிய அளவிற்கு வழிகோலியது.

அதன் பிறகு எங்கள் மகனின் நினைவாக இதையே மக்களிடையே பிரச்சாரமாக எடுத்துச் சென்றோம். தனது மரணத்திற்கு பிறகும் கூட நல்லது செய்ய முடியும் என்ற எண்ணத்திற்கு தமிழக மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்பட்டு ஏராளமான உடல் உறுப்பு தானங்கள் நடந்தன. நானும் பொது நிகழ்ச்சிகள், சமூக அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு சென்று உடல் உறுப்புதானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரச்சாரம் செய்து வருகிறேன். இதை வாழ்வின் முக்கிய நோக்கமாக கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறேன்.

இந்த சூழலில் தானம் வழங்கப்படும் உடல் உறுப்புகள் சரியான, ஏழை, எளிய மக்களுக்கு போய் சேராமல், வர்த்தக நோக்கத்துடன், வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவதாக வந்துள்ள தகவல் என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. உடல் உறுப்பு தானம் என்பது முறைப்படியாக நடைபெறவில்லை என்ற தகவலால் நொறுங்கி போயுள்ளேன். நான் மட்டுமின்றி என்னை போன்று இதற்காக பாடுபட்டு வரும் பலரும் வேதனையில் உள்ளனர்.

கார்பரேட் மருத்துவமனைகள் இந்த தவறு நடப்பதற்கு பின்னணியில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கண்காணிக்க வேண்டிய அமைப்பும், அரசு நிறுவனமும் உரிய முறையில் செயல்படாததால் உடல் உறுப்பு தான இயக்கத்திற்கே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் பெருந்தன்மையானவர்கள்; அவர்களின் நல்ல எண்ணத்தை சிலர் தங்கள் சுயலாபத்திற்காக கொச்சைப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சேவை மனப்பான்மையுடன் நடப்பவர்களை மக்கள் வரவேற்பார்கள்; கொண்டாடுவார்கள். அவர்கள் சுயநலத்திற்காக செயல்பட்டால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வெறுத்து ஒதுக்குவார்கள்; தேவைபட்டால் எதிர்த்து போராடுவார்கள்.

இந்த ஆண்டு எனது மகன் மறைந்து 10 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அடுத்த மாதம், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மக்களிடம் வழங்க துண்டு பிரசுரங்களை தயார் செய்து வைத்துள்ளேன். ஆனால், முறைகேடு தொடர்பாக தற்போது வரும் செய்திகளை பார்த்த பின்பு, இதை மக்களுக்கு கொடுப்பதா? வேண்டாமா? என்ற என்னை கேட்டுக் கொள்ளும் சூழலில் உள்ளேன். இதுபோன்ற வெறுப்பு தான் மற்றவர்களுக்கும் ஏற்படும். ஒரு நல்ல விஷயத்திற்காக பாடுபட்டு வருபவர்களுக்கு, இதுபோன்ற முறைகேடு குறித்து தகவல்கள் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.

அப்படியானல் உடல் உறுப்பு தானத்தை வழிநடத்தும் அமைப்பு சரியான முறையில் செயல்படவில்லையா?

ஆரம்ப காலத்தில் எல்லாம் சரியாக தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது என்பதால் புதிய புதிய நபர்கள் இதனுள் வந்தனர். நான் மருத்துவர் என்பதால் எனது மகனின் உடல் உறுப்புகள் சரியான நபருக்கு செல்வதை உறுதி செய்ய முடிந்தது. இதுபோன்று உடல் உறுப்பு தானம் செய்யும் அனைவரும் செய்ய முடியும் என எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் இதனை வரன்முறைப்படுத்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் இதனை உரியமுறையில் செய்ய வேண்டும். உடல் உறுப்பு தானம் கோருவோர் யார்? அளிக்க விரும்பும் நபர்கள் யார்? எப்போது விண்ணப்பித்தார்கள்? எவ்வளவு காலமாக காத்திருக்கிறார்கள். அவர்களது பொருளாதார பின்புலம் என்ன? போன்ற விவரங்களை அவர்கள் வெளிப்படையாக அறிவித்து செயல்பட வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் இதனை சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் தடுக்க என்ன வழி?

ஒரு மருத்துவமனையில் நடைபெறும் உறுப்பு தான அறுவை சிகிச்சை, மூளைச்சாவு அடைந்தவர்கள் குறித்த விவரம் போன்றவற்றையும், அது உரிய முறையில் நடைபெறுகிறதா? என்பதையும் தொடர்ந்து கண்காணித்து ‘ஆடிட்’ செய்ய வேண்டும். பல வெளிநாடுகளில் இப்படி தான் நடக்கிறது. ஆனால் இங்கு எந்த கட்டுப்பாடும் இன்றி மருத்துவமனைகள் நடக்கின்றன.

உடல் உறுப்பு தானம் என்பது ஏழை எளிய மக்களுக்கு கிடைக்காமல் போவதற்கு காரணம் என்ன?

மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பை பொருத்தும் முன்பு அதற்கான ஆணையத்திடம் கோருவோர் விவரத்தை முதலில் பெற வேண்டும். ஆனால் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருப்பவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று காரணம் காட்டி அது வேறு நபருக்கு சென்று விடுகிறது. தனியார் மருத்துவமனைகள் இதற்கான பணம் செலவழிக்க அந்த நபருக்கு வாய்ப்பில்லை என்று கூறி வேறு நபரை தேடுகிறது. இந்த ஓட்டத்தில் கடைசியில் அதிக பணம் செலவழிக்கும் வெளிநாட்டினர் தேர்வு செய்யப்பட்டுவிடுகின்றனர்.

ஆனால் அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீடு திட்டங்கள் உள்ள நிலையில் அதன் மூலமே இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும். ஆனால் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருந்தால் மருத்துவனைகள் இதற்கு சம்மதம் தெரிவிக்காது.

அரசு மருத்துவமனைகள் மூலம் இதுபோன்ற அறுவை சிகிச்சை நடைபெற வாய்ப்பில்லையா?

தற்போது அரசு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இந்த அறுவை சிகிச்சையை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். அதுபோன்ற சூழல் இருந்தால் தனியார் மருத்துவனைக்கு உடல் உறுப்புகள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சாதாரண, ஏழை, எளிய மக்களுக்கு இந்த பயன் போய் சேரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்