“சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம்” - கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம் என்றும், அனைவருக்கும் கண்ணியத்துடன் பதிலளிக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியின் வி சாலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் அதன் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாகிரா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் விஜய் பேசியது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து மக்களிடம் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். கூட்டணி குறித்து பிறகு ஆலோசிப்போம். சீமான் உள்ளிட்ட தலைவர்களை இகழ்ந்து பேச வேண்டாம். குறிப்பாக அதிமுக மீதான விமர்சனங்களை அறவே தவிர்க்க வேண்டும். தவெக மீதான விமர்சனங்களுக்கு சரியான ஆதாரத்துடன், கண்ணியத்தோடு உடனுக்குடன் பதிலளிக்க வேண்டும்.

யாருடைய சொந்த வாழ்க்கை குறித்தும் விமர்சிக்கக் கூடாது. அவதூறான வகையில் பதில் இருக்கக் கூடாது. பூத் கமிட்டியில் அதிகளவு பெண்களை இடம்பெறச் செய்ய வேண்டும். வாக்கு சேகரிப்பில் பெண்களின் பங்கு அதிகளவு இருக்க வேண்டும். கொடி ஏற்றவும், பொதுக்கூட்டம் நடத்தவும் காவல்துறை அனுமதி கிடைக்காவிட்டால் தலைமைக்கு தெரிவிக்கவும். டிச. 27-ம் தேதிக்குப் பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும். இவ்வாறு விஜய் பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தவெகவில் தொண்டரணி: திமுக, மதிமுக பாணியில் தவெகவிலும் கட்சித் தலைவர் விஜய்யின் பாதுகாப்புக்கான தொண்டரணி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, விஜய்யின் உருவம் பொறித்த மஞ்சள் நிற டீசர்ட் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொள்கைத் தலைவர்கள் வழியை சமரசமின்றி பின்பற்றுவோம். மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி. மத்திய அரசின் ஒரேநாடு, ஒரே தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம். எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் அணுகுமுறையை திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் கடுமையாக எதிர்க்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்பமாட்டார்கள்.

மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை தமிழக அரசு நடத்த வேண்டும். நீட் விவகாரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசை எதிர்க்கிறோம். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் போராட தயங்கமாட்டோம்.

நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க விவசாயிகள் ஒப்புதலின்றி நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. கோவையில் மெட்ரோ பணிகளைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். மீன்பிடி உரிமை தொடர்பான சர்வதேச சட்டத்தை வலியுறுத்தி மீனவர்களுடன் இணைந்து போராடுவோம். தமிழ்மொழி சார்ந்தவற்றில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை. தாய்மொழியை காக்கும் முயற்சிகளில் சமரசமின்றி செயல்படுவோம்.

மூன்றாவது மொழியை திணிக்கும் மத்திய அரசின் கனவு எக்காலத்திலும் நிறைவேறாது. கட்டணம், வரிகளை உயர்த்தி மக்களின் பொருளாதார நிலையை கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பட்டப் பகலில் குற்றச் செயல்கள், போதைப் பொருட்கள் புழக்கம் போன்ற நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சிலரின் நலனில் அக்கறையுடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய்களின் பட்டியலாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியது தான் தற்போது ஆளும் திமுக. அறிக்கையின்படி, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும். ஒருபுறம் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்து, மறுபுறம் மதுக்கடையை திறந்து அரசுக்கு வருவாய் பெருக்குவது ஏற்புடையதல்ல.

கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய சகோதரிக்கு விருது வழங்க வேண்டும். வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வகையில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தகைசால் தமிழர் விருது வழங்குவதற்காக தமிழக அரசையும், குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசையும் வரவேற்கிறோம். கட்சி நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் என்பன உட்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்