சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் தீர்மானம்: கொள்கைகளையும் கொள்கைத் தலைவர்களையும் உறுதியாகப் பின்பற்றுவதில்தான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சியும் வேகமும் விவேகமும் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் அதை நன்கு உணர்ந்து, தன் கொள்கைத் தலைவர்களின் வழி நடக்கும் இயக்கம் ஆகும்.
2. மாநாட்டை வெற்றிபெற வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்று, தமிழக அரசியல் களத்தில், புதிய வரலாறு படைத்திருப்பது காலாகாலத்திற்கும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி.
» ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு விண்ணப்பிக்க டிச.16 கடைசி நாள்: அறநிலையத்துறை
» அக்டோபருக்குள் நடத்தி முடிக்கப்பட்ட 19 அரசு பல்கலை. பட்டமளிப்பு விழா - ஆளுநர் மாளிகை பெருமிதம்
3.மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்கத் தீர்மானம்: ஆறுகள், மலைகள், கடல்கள், மண்ணின் இயற்கை வளங்கள் மட்டுமல்ல. ஒரு மண்ணின் குணநலன்களும் ஆகும். அதுபோல ஒரு கட்சியின் கொள்கைகள்தான் அக்கட்சியின் வளத்தையும் குணநலன்களையும் பேசுபவையாக இருக்கும். மேலும், அரசியல் என்பது மாநில மற்றும் மக்கள் தேவைகளையும் உரிமைகளையும் சார்ந்ததாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் கொள்கைகளும் இருக்க வேண்டும்.
கொள்கைகள் என்பவை, மக்கள் சார்ந்தும் மண்ணைச் சார்ந்துமே இருக்க வேண்டும். இதை நுட்பமாக உணர்ந்ததால் மட்டுமே இந்தத் தமிழ்நாட்டு மண்ணில் இருக்கும் அனைத்து மக்களுக்கான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மட்டுமல்லாது மக்கள் மற்றும் மாநில உரிமைகளைச் சார்ந்த நலன்களையும் பேணிப் பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் வந்தது. அதனால்தான் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் இருக்க வேண்டாம் என்ற முடிவையும் திண்ணமாக எடுத்தது.
மக்கள் மனங்களில் நாம் முன்வைக்கின்ற கொள்கைகள் தங்களுக்கான பாதுகாப்பைத்தான் பேசுகின்றன என்ற நம்பிக்கையை ஆழமாக ஏற்படுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய கொள்கைகளுக்கு "மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்" என்று பெயர் சூட்டியுள்ளது என்பதை விளக்க வேண்டியது நம் கடமை ஆகும்.
தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் எப்போதும் போற்றிப் பாதுகாக்கும் என்பதையும் இந்தச் செயற்குழு வாயிலாக மீண்டும் தெளிவுபடுத்துகிறது.
4. ஜனநாயகக் கொள்கை தீர்மானம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அறிவிப்பும், அதைச் சட்டமாக்குதலும் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள். மக்களாட்சித் தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சட்டத்தை, இச்செயற்குழு கண்டிக்கிறது.
ஜனநாயக நாட்டில் உண்மையான மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி, ஆளும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று. உண்மையான, நேர்மையான கருத்துகளைத் தெரிவிப்பதும் மக்களுக்காகப் போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல; உரிமையும் ஆகும்.
அத்தகைய உரிமையை, அரசின் பழிவாங்கும் நடவடிக்கை வாயிலாகத் தடுக்க முயல்வதும், ஊடகங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுப்பதும், சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்கள் விரோத சக்திகள் பயன்படுத்தும் அணுகுமுறை. இத்தகைய அரசியல் அணுகுமுறையை, தமிழகத்தைத் தற்போது ஆளும் திமுக ஆட்சியாளர்கள் உட்பட யார் செயல்படுத்தினாலும் இச்செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது.
5.பெண்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, இது போன்ற வழக்குகளில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாரபட்சமின்றி, கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வாயிலாக உடனடியாகப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தீர்க்கமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
6.சமூக நீதிக் கொள்கை தீர்மானம்: சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
7.மாநிலத் தன்னாட்சி உரிமைக் கொள்கை தீர்மானம்: மாநிலத்திற்கான தன்னாட்சி (State Autonomy) உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி, மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி. எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.
8.விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கு நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு. ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
9.கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரும் தீர்மானம்: கல்வி, தொழில், மருத்துவம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில் நகரமான கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கச் சென்னையைப் போன்று. கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
10. ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம்: இலங்கை தொடர்பான விசயங்களில், தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.
தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள் தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக்கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி. மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை.
11.மொழிக் கொள்கை தீர்மானம்: முதலில் திருவள்ளுவருக்கு வர்ணம் பூசினர். அடுத்து தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்றனர். அதன்பிறகு. தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்போர் எங்கள் தாய்மொழித் தமிழ் மட்டுமல்லாமல், தமிழ்மொழி சார்ந்த எந்த ஒன்றிலும் தலையிட ஒன்றிய அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக இங்கு நியமிக்கப்படுகிற எவருக்கும் எந்தவித உரிமையும் இல்லை.
மொழி உரிமையே எங்கள் தமிழ்த் திருநாட்டின் முதல் உரிமை என்ற எங்கள் கொள்கைப்படி எங்கள் தாய்மொழி காக்கும் எல்லா முயற்சிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சமரசமின்றிச் செயல்படும். தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக. மூன்றாவது மொழியைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் கனவு, எமது மொழிப்போர் தியாகிகள் வாழ்ந்த மண்ணில் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உரக்கச் சொல்லிக்கொள்கிறது.
12.மக்கள் மீது நிதிச் சுமைத் திணிப்பு சார்ந்த தீர்மானம்: அரசின் வருவாயைப் பெருக்க எந்த ஓர் அறிவார்ந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், மின் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு. சொத்து வரி உயர்வு போன்று பொதுமக்கள் மீது மேலும் மேலும் வரிச் சுமையை மட்டுமே அதிகமாக விதித்து மக்களின் பொருளாதார நிலையைக் கேள்விக்குறி ஆக்கியுள்ள திமுக அரசுக்கு இச்செயற்குழு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.
13. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்: அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது. மேலும், தொடரும் கள்ளச் சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரிசெய்யாமல், மக்கள் நலனைக் காட்டிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளும் திமுக அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
14.மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கத் தீர்மானம்: ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதன் வாயிலாக ஜனநாயகத்தையும் மக்களையும் ஏமாற்றியதுதான் தற்போதைய ஆளும் கட்சியான திமுக. தேர்தல் வாக்குறுதியை வழக்கம்போலக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, ஏழை, நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத மின்கட்டண உயர்வைத் திணித்துள்ள தமிழக அரசு, இரு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
15.மதுக்கடைகளை மூட வலியுறுத்தும் கொள்கை தீர்மானம்: மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து அதன் மூலம் அரசுக்கு வருவாயைப் பெருக்கி வருவது ஏற்புடையதல்ல. சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும். மதுக்கடை மூலம் பெறும் வருவாயை விடக் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்றுத் திட்டங்களைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
16.உச்ச நீதிமன்றக் கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்: தென்னிந்தியாவிற்கான உரிய பிரதிநிதித்துவம் வழங்குகின்ற வகையில், உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற பெஞ்ச்சில் வழக்கு சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகள் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போது அதைச் சரியாகப் புரிந்துகொள்ளும் பொருட்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு. இதைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
17.தமிழ்நாட்டின் தொன்மப் பெருமைப் பாதுகாப்புத் தீர்மானம்: தமிழ் மண்ணின் மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர் ஆட்சியின் வரலாற்றுப் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில், பிரமாண்டமான அருங்காட்சியகம் சென்னையில் கட்டப்பட வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
18.விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்: தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட தலைவர்களை, எவ்விதச் சமரசமும் இன்றிப் போற்றுவதைக் கடமையாகக் கருதுகிறோம். தமிழக மக்களின் வரிப்பணத்தில், தமிழக அரசால் புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்படும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள். நூலகங்கள் மற்றும் கலையரங்கங்களுக்கு தமிழ் மண்ணிலிருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப்போர்த் தியாகிகளின் பெயர்களைச் சூட்டி, அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
19.கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்: தமிழ் மொழி சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் தலைவர்கள் மற்றும் தமிழ் முன்னோடிகளின் பெயரில் தமிழக அரசு சார்பில் பல்லாண்டுகளாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆகவே. இஸ்லாமிய சகோதரிகளின் தமிழ்த் தொண்டை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சகோதரி ஒருவருக்கு அரசு சார்பில் கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது.
20.முதியோர் நல்வாழ்வை உறுதி செய்யத் தீர்மானம்: உலக அளவில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் எண்ணிக்கை 110 கோடியாகவும், நமது நாட்டில் இந்த எண்ணிக்கை 14.9 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இவர்கள் எண்ணிக்கை, வரும் பத்தாண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்களை அக்கறையுடன் பாதுகாத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதியோர் நலனை உறுதி செய்யும் கொள்கை வரைவை உருவாக்கி நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
21. இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்: இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இன்னொரு முயற்சியே இது. எங்கள் மண்ணையும் மக்களையும் பாழ்படுத்தும் இதுபோன்ற அபாயம் விளைவிக்கும் நாசகர, நச்சுத் திட்டங்களை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
22. இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கின்றது என்று கூறி எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான தாக்குதலாக இருக்கின்ற வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
23.நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்: நீட் தேர்வால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ & மாணவிகள் குறிப்பாக, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின் வகுப்பினைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் அனைவருமே மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு விலக்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்.
ஒருவேளை அதில் சிக்கல் இருக்கிறது என்றால், ஓர் இடைக்காலத் தீர்வாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி ஒரு சிறப்புப் பொதுப் பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வியைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழுச் சுதந்திரம் தரப்பட வேண்டும். அப்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியும். எனவே கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
24.தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்: ஆளும் அரசுகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது, மக்கள் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டும் எங்களின் அரசியல் அணுகுமுறை அல்ல. ஆளும் அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஆதரித்து வரவேற்பதையும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகக் கருதுகிறோம்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர் விருது' வழங்குகிறது. இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருவதற்காகத் தமிழக அரசை இச்செயற்குழு வரவேற்கிறது.
25.ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் சுமார் 2.376 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைக்க உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியதுடன், பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை இச்செயற்குழு வரவேற்கிறது.
26.இரங்கல் தீர்மானம்: நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தீராப் பற்றுடன் கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த போராளிகள் சிலர் அண்மையில் மறைந்த நிகழ்வுகள், அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றன. இவர்களின் இழப்புகள். ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago