செ
ன்னை - சேலம் இடையேயான வாகனப் போக்குவரத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 100 சதவீதம் அதிகரித்துள்ளதால் பசுமை வழிச்சாலை திட்டம் தொடங்கப்படுவதாக தெரிவிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த திட்டத்தால் கிடைக்கப்போகும் பலன்களையும் பட்டியலிடுகின்றனர்.
சேலம் பசுமை வழிச்சாலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக அவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘பாரத்மாலா பரியோஜனா’ என்ற மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிலான நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை - சேலம் (277 கி.மீ) தனி யார் பங்களிப்புடன் சுமார் ரூ.10,000 கோடி செலவில் 8 வழி பசுமை வழிச்சாலையாக மத்திய அரசு அமைக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு இன்னும் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த பசுமை வழிச்சாலை மக்களின் போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும். ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை மூலமாக 360 கிலோ மீட்டரும், சென்னை- மதுரை நெடுஞ்சாலை மூலமாக 350 கிலோ மீட்டரும் பயணித்து சேலம் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அமையவுள்ள பசுமை வழிச்சாலை மூலமாக பயண நேரம் 5 மணி நேரமாக குறையும்.
மேலும், ஏற்கெனவே உள்ள 2 முக்கிய சாலையில் 100 சதவீதம் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதாவது, 2004-ம் ஆண்டில் சென்னை - சேலத்துக்கு ஒரு ஆண்டுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. ஏற்கெனவே உள்ள சாலைகள் 6 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இனி வரும் ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், இந்த புதிய சாலை திட்டம் அவசியமாகியுள்ளது.
3 லட்சம் மரக்கன்று
இந்த சாலையை ஒட்டியுள்ள முக்கியமான பகுதிகளில் மத்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு தேவையான உதிரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழிற்சாலைகளை நிறுவ முடிவு செய்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். மேலும், இந்த பசுமை வழிச்சாலை மூலமாக விவசாயப் பொருட்களை எளிதாகவும், விரைவாகவும் கொண்டுசெல்ல முடியும். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் நேரடி சாலையாகவும் இருக்கும். பசுமை வழித்தடத்தின் இருபுறமும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிருப்திக்கான காரணங்கள்
விளை நிலத்தின் வழியாக பசுமை வழிச்சாலை அமைப்பதால் தங்கள் நிலத்துக்கு வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தாலும், தங்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்பது முறையாக கூறப்படாததும் விவசாயிகளை தடுமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதில், பல இடங்களில் விளை நிலத்தில் கட்டப்பட்டுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகளும், கிணறுகளும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ளதே விவசாயிகளின் கடும் அதிருப்திக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கடந்த ஆண்டு வறட்சிக்கு பின்னர் பெய்த மழையால் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் விளை நிலங்களில் பயிர் விளைச்சல் அமோகமாக உள்ளது. அறுவடைக்கு தயாராக செழித்து வளர்ந்துள்ள பயிர்களும், தென்னங்குலைகளுடன் காட்சியளிக்கும் தென்னை மரங்களும் உள்ள விளை நிலத்தில் திடீரென வருவாய்த் துறையினர் நுழைந்து முட்டுக்கல் நடுவது, விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த பூலாவரி அருகே சித்தனேரி கிராமத்தில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் நிலத்தின் உரிமையாளர் ரவி கூறியதாவது:
எங்களது விளை நிலத்துக்கு பட்டா உள்ளது. நிலத்தை கையகப்படுத்த வந்த நீங்கள் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து எங்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தீர்களா? பசுமை வழிச்சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு சுவர் அமைத்தால், சாலையின் மறுபுறத்தில் அமையும் நிலத்துக்கு நான் செல்வதற்கு பாதை வசதி செய்து தருவீர்களா? என்னுடைய நிலத்தில் பசுமை வழிச்சாலை அமைப்பதால், அந்த சாலையில் பயணிப்பதற்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவீர்களா? இதுபோன்ற எந்த தகவலையும் தெரிவிக்காமல் திடீரென எனது நிலத்தில் முட்டுக்கல் நடுவதற்கு வந்தால் எப்படி அனுமதிப்பது. விளக்கம் கொடுங்கள். அதன்பின்னர் முட்டுக்கல் நடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு கேட்டதால் கொடுத்தேன்
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வெள்ளியம்பட்டி விவசாயி முருகேசன் (62) கூறியது: எனக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கரில் சுமார் முக்கால் ஏக்கர் நிலம் சாலைக்காக அளவீடு செய்யப்பட்டுள்ளது. அதில் நானும், என்னுடைய மகன்களும் வசிக்கும் 3 வீடுகள் இருக்கும் இடமும் கையகப்படுத்தப்பட உள்ளது. இங்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியர், பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டிக்கொடுப்பதாகவும், படித்துள்ள எனது மருமகளுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலம், மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு கேட்பதால் நிலத்தை கொடுத்துதானே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சாலை விரிவாக்கம் அவசியம்
தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செயலாளர் நல்லசாமி கூறியது: நாட்டில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்றாக இருந்தபோது மக்கள் தொகை 30 கோடி. இன்று இந்தியாவில் மட்டும் 120 கோடிக்கு மக்கள் உள்ளனர். இதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, தொலைநோக்கு அடிப்படையில் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
எந்த திட்டமாக இருந்தாலும் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். பசுமை வழிச்சாலை திட்டம் மக்கள் நலனை முன்னிறுத்தி செய்யப்பட வேண்டும். பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் இடங்களில் பாதியளவு நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளின் மீதி நிலம் சாலையோரத்தில் அமையும்போது அந்த நிலத்துக்கு சந்தை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்களை விட, முழுமையாக நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கு 15 சதவீதம் கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். எனினும், கடந்த காலங்களில் பல திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு முறையாக சென்றடையவில்லை. எனவே, உரிய இழப்பீடு தொகையை முறையாக விவசாயிகளுக்கு கொடுக்கும் பட்சத்தில் பலர் தாமாக முன்வந்து நிலம் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சரக்கு போக்குவரத்து விரைவாகும்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்ன கேசவன் கூறியதாவது: சேலத்தில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 500 முதல் 600 லாரிகள் இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் 300 முதல் 400 வரை இயக்கப்படுகின்றன. இந்த சூழலில் சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பது சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சேலம்- சென்னை இடையிலான பயண நேரம் பெருமளவு குறைவதால், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு எரிபொருள் செலவு குறையும். பசுமை வழிச்சாலையில் பக்கவாட்டு சாலைகள் எதுவும் 90 டிகிரியில் வந்து இணையாது. மேலும், கால்நடைகள் சாலையின் குறுக்கே வராத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்படும், சாலையில் வாகனங் கள் நிற்பதற்கு ஒதுக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை உள்ளிட்டவற்றால் விபத்துகள் பெருமளவு குறையும்.
சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு, பயணிகளுக்கு விரைவான பாதுகாப்பான வசதி ஆகியவை கிடைக்கும். இந்த திட்டத்துக்காக நிலம் கொடுக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பசுமை வழிச்சாலை குறித்து விவரங்களை கிராம மக்களுக்கு தெரியப்படுத்தி அதன் நன்மைகளை விளக்குவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த அச்சத்தை போக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நிலத்துக் கான இழப்பீடு, வேலை உத்திரவாதம் ஆகியவற்றை உடனுக்குடன் நிறைவேற்றுவதன் மூலம் விவசாயிகளின் நம்பகத்தன்மையை பெற்று இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 secs ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago