தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ல் கீழ்க்கட்டளைக்கு அருகே உள்ள பிருந்தாவன் நகர், பாலாஜி அவென்யூ, கேஜிகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான தெருக்கள் தாழ்வானதாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்நிலை உள்ளது. இதுதவிர மூவரசன்பேட்டை ஏரி நிரம்பிவிட்டால் அதன் உபரிநீரும் இந்த தெருக்களில் புகுந்துவிடுவதால் பருவமழையின்போது இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும். எனவே, மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டுமென நீண்டகாலமாக அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையேற்று கீழ்க்கட்டளை மற்றும்அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் வடிகால்அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதேநேரம் திட்டப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அந்த பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை சுற்றி முழுமையான பாதுகாப்பு தடுப்புகளும் அமைக்கப்படாததால் விபத்துஏற்படும் அபாயமும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: எஸ்.பிரசன்னா, தனியார் வங்கி ஊழியர்: பிருந்தாவன் நகரில் 3 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். சிறிய மழைக்குகூட இங்கு தண்ணீர் தேங்கிவிடும். பாதாள சாக்கடை வசதிகளும் இல்லாததால் மழை வெள்ளத்துடன் கழிவு நீரும் சேரும்போது நிலைமை மோசமாகிவிடும். இதை சரிசெய்வதற்காக மழைநீர் வடிகால் அமைப்பது வரவேற்கத்தக்கது. எனினும், முறையான திட்டமின்றி வேலைகள் மிகமெதுவாக மேற்கொள்ளப்படுவதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. தெருவில் தோண்டப்பட்ட குழிகளையும் முறையாக மூடாமல் பெயருக்குசில தடுப்புகள் மட்டும் அமைக்கின்றனர். இதனால்அதில் நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரசீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கால்வாய் அமைக்கும் பணியை மாநகராட்சி விரைந்து முடிப்பதுடன், பணிகளையும் உரிய பாதுகாப்புஅம்சங்களுடன் மேற்கொள்ள வேண்டும்.
தேன்மொழி, இல்லத்தரசி: மாதக்கணக்கில் பணிகள் செய்து வருகின்றனர். ஆனாலும், வேலை முடிந்தபாடில்லை. தெருச்சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. வாடகை கார் ஓட்டுநர்களும் இந்த பகுதிகளுக்கு வரத் தயங்குகின்றனர். பருவமழை பெய்ய தொடங்கிவிட்டால் சாலையில் பள்ளம் இருப்பது கூட தெரியாது. எனவே, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கீழ்க்கட்டளை பகுதியில் நீண்டகால அடிப்படையிலான திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை பல்வேறு கட்டங்களாக பிரித்து செய்து வருகிறோம். சமீபத்தில் பெய்த கனமழையால் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனவே, திட்டப் பணிகளில் எந்த சுணக்கமும் இல்லை. கனமழை, மின் இணைப்பு கேபிள்கள் இடையூறு உள்ளிட்டவற்றால் மட்டுமே பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. மற்றபடி தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்படும் குழிகளை சுற்றி முழுமையாக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஏதேனும் சில இடத்தில் தடுப்புகள் இல்லாமல் இருப்பதை மக்கள் தெரிவித்தால் உடனடியாக அமைக்கப்படும்’’என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago