தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

பணி, கல்வி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருப்போர் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன்மூலம் 5.76 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

இதேபோல், மாநிலம் முழுவதும் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் பொதுமக்கள் சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப இன்று முதல் நவ.4-ம் தேதி வரை 7,605 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 சிறப்பு பேருந்துகளுடன் 600 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 685 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்றும், நாளையும் சென்னையை நோக்கி வருவோர், அவரவர் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் மாலை, இரவு நேரங்களில் கூடுதலாக 100 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது: தீபாவளி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டபோதிலும், தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை வரை அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமையே (நவ.3) ஊர் திரும்ப திட்டமிடுவர். இதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் பயணிக்க அதிகளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு பேருந்துகளில் திரும்ப வேண்டுமானால் 10-14 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

விரைவு பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு நிறைவடைந்துவிட்டன. அரசின் பிற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவ்வளவு தூரம் பயணிக்க இயலாது. இதன் காரணமாகவே ஆம்னி பேருந்துகளில் பயணிக்கிறோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை (நவ.3) திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இருக்கையில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.1,700, படுக்கையில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. இதேபோல் நாகர்கோவில், மதுரை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளிலும் அதிகபட்சமாக ரூ.4,500 வரை வசூலிக்கப்படுவதாக தனியார் முன்பதிவு செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கவனம் செலுத்தி, கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, "ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த வகையிலான வாகனம் என்பதால் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதிகபட்ச கட்டணத்தை உரிமையாளர்கள் சார்பில் நிர்ணயிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுடன் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். அதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை" என்றனர்.

பேருந்து இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, "பயணிகளின் தேவைக்கேற்ப போதிய பேருந்துகளை இயக்க தயார் நிலையில் உள்ளோம். பேருந்து இயக்கம் தொடர்பான உதவிகளுக்கு 7845700557, 7845727920, 7845740924, 94450 14436 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கைவிடுத்து வருகிறோம். அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்களின் அடிப்படையில் அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்