தீபாவளி பண்டிகை: இபிஎஸ், செல்வப்பெருந்தகை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளிப் பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மக்களுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக: “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்த நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேமுதிக: “தீபாவளி திருநாள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடும் சிறப்பான பண்டிகையாகும். மக்கள் தங்கள் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை ஏற்றும் தீப ஒளி திருநாளாக இதைப் போற்றுகிறார்கள். இந்த இனிய நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம்.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்: “தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது. தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்: “தீபங்களின் வரிசை என்றழைக்கப்படும் தீபாவளித் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் எனது அருமை தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள் ஏற்றி வைக்கும் தீப ஒளி அழித்து விடுவதுபோல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை
அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் தத்துவம். இதற்கேற்ப, அனைவர் உள்ளங்களிலும் அறியாமை அகன்று அறிவொளி ஏற்பட வாழ்த்துகள்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: “மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, இளைஞர் நலன், தொழிலாளர் நலன், மகளிர் நலன் என அனைத்துத் துறைகளிலும் இருள் தான் சூழ்ந்திருக்கிறது. வண்ண ஒளிகளின் திருவிழா, மத்தாப்புகளின் திருவிழா என ஒருபுறம் தீபஒளித் திருநாளை வர்ணித்தாலும் மக்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது. இந்த இருள் அகற்றப்பட்டு உண்மையான வெளிச்சம் பிறக்கும் போது தான் தீபஒளி அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

தமிழ்நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக இருளை பழித்துக் கொண்டு மட்டும் இருப்பதில் பயனில்லை; அதை அகற்றி ஒளியேற்ற வேண்டும். அந்த ஒளியால் சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட ஜொலிக்கவும், மக்களின் வாழ்வில் இல்லாமை என்பதே இல்லாததாகி, மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்க தீப ஒளி வகை செய்யட்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: “மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளியின் மகிழ்ச்சி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் கிடைப்பதாக இருக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைப்பதை உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். ஆட்சியாளர்களால் அதை சாத்தியப்படுத்த முடியவில்லை என்றால், அதை சாத்தியமாக்கும் திறன் யாருக்கு இருக்கிறதோ, அவர்களை ஆட்சியாளர்களாக்க வேண்டும். அதன்மூலம் மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்: “தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என அமமுக பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்