திருவண்ணாமலை: “பாஜக எதிர்ப்பில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உறுதியாக இல்லை” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று (அக். 29) நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அக்கட்சியின் தலைவர் விஜய் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவரிடம் ஆக்கபூர்வமான அறிவிப்புகளை தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர், பல்வேறு ஊகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். தனக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் இனிமேல் எழக்கூடிய விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில், அதிக நேரம் எடுத்துக் கொண்டார்.
நண்பர்கள் யார் என்று அடையாளம் காட்டுவதைவிட, தன்னுடைய எதிரிகள் யார் என்று அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். யார், நம்முடைய நட்பு சக்திகள், யாருடன் நம்மால் இணைந்து செயல்பட முடியும் என்று தொண்டர்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு பதிலாக, தம்முடைய எதிரிகள் யாரென்று வரிசைபடுத்துகிறபோது, பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிளவுவாத சக்திகளை குறிப்பிடும்போது, வெளிப்படையாக சொல்லவில்லை. குறிப்பிட்ட கட்சி, அமைப்பு என அடையாளப்படுத்தவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என பிளவுவாதம் பேசுவதில் உடன்பாடில்லை. இத்தகையை பிளவுவாத சக்திகளை எதிர்ப்போம் என மேம்போக்காக சொல்கிறார். இதில் முரண்பாடு தெரிகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று சொல்கிறபோது, ஒரு சமத்துவ அரசியலை முன்மொழிகிறார் என மகிழ்ச்சி அடையும் நிலையில், பெரும்பான்மை - சிறுபான்மை என்று பேசுகிற அரசியலில் உடன்பாடு இல்லை என்கிறபோது, பெரும்பான்மை வாதத்தை பேசுகிறவர்கள் யார் என்று அடையாளப்படுத்துகின்ற தேவை இருக்கிறது. அவர்கள்தான், நம்முடைய எதிரிகள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை, சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால், பெரும்பான்மை வாதத்துக்கு துணை போகிற நிலைபாடாக அமைந்துவிடுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பான்மை பேசுகிற ஓரே கட்சி பாஜக. இதற்கு சங்பரிவார் துணை நிற்கிறது. இதனால் சிறுபான்மை சமூகத்தினர், எந்த அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பது உலகம் அறிந்த உண்மை. இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும், இந்த மண்ணில் அச்சத்துடனும், பீதியுடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலில் நம்பிக்கை இல்லை, இதனை எதிர்க்கிறோம் என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கடந்துபோகிறார்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பவுத்த, சமண மத சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து என்ன நிலைபாட்டை கொண்டுள்ளார் என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. குழப்பமான நிலையாகவே இருக்கிறது. பாசிச எதிர்ப்பை பற்றி பேசும்போது, கிண்டலடித்துவிட்டு, பாசிச எதிர்ப்பு ஒன்றுமில்லை என்று கடந்து போகிறார்.
பாசிஸ்ட் என யாரை குறிப்பிடுகிறார்.அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் பாயாசமா என்று கேட்கிறார். இதில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று, பாசிச எதிர்ப்பு பெரிய விஷயமில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். மற்றொன்று, நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான், நீங்கள் ஒன்றும் ஜனநாயக சக்திகள் இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். நீங்களும் பாசிஸ்ட்டுகள்தான் என்று திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது அகில இந்தியளவில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 28 கட்சிகளை சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளும் பாசிச அரசியலை எதிர்க்கிறோம். இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளையும் பாசிஸ்ட் என்று கேலி செய்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. பாசிச எதிர்ப்பு தேவையில்லை என்பதால், பாஜக எதிர்ப்பும் தேவையற்றது என்ற பொருளும் வெளிப்படுகிறது. ஆகவே, பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பது, அவரது உரை மூலம் உணரமுடிகிறது.
சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சி: விஜய் உரையில், திமுக எதிர்ப்பு நெடி அதிகம் வீசுகிறது. திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார், குடும்ப அரசியல் என்று மு.கருணாநிதியின் குடும்பத்தை எதிர்க்கிறார். திமுக கூட்டணியையும், விமர்சனத்துக்குள் உட்படுத்துகிறார். திமுக மற்றும் திமுக அரசு எதிர்ப்பாகவே, அவரது உரையின் சாரம்சமாக இருக்கிறது. திமுக, திமுக அரசு, கருணாநிதியின் குடும்ப எதிர்ப்பு என்பது புதிய நிலைபாடு அல்ல. முதன்முதல் ஒலிக்கும் குரலும் அல்ல.
தமிழகத்தில் நீண்ட காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் அரசியல்தான். ஆனால், மக்களிடம் எடுபடவில்லை என்பதுதான், வரலாறு நமக்கும் உணர்த்தும் உண்மையாக இருக்கிறது. விஜய்யிடம் நாம் எதிர்பார்த்த ஆக்கபூர்வமான அறிவிப்பு இல்லை, கொள்கை பிரகடனம் இல்லை, செயல்திட்டம் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்ற விஜய் அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியாகதான் பார்க்கின்றேன்.
வெறும் இடத்தில் கத்தியை வீசுகிறார்: உண்மையில், அதிகார பகிர்வு அளிப்பதாக இருந்தால், அவர் மறைமுக செயல்திட்டமாகதான் கையாண்டிருக்க வேண்டும். தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஏற்று, எந்தெந்த கட்சிகள் வருவார்கள் என்பது கேள்விகுறியாக இருக்கிறது. எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், அமைச்சர் பதவியா, துணை முதலமைச்சர் பதவியா என தீர்மானிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்பட வேண்டிய அரசியல் உக்தி.
திரைமறைவில் பேசப்பட வேண்டியது. வெளிப்படையாக பேசுகிறார் என்றால், திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் என்று பொருள். ஆகவே, அவர் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது. சரியான நேரத்தில் கையாளப்பட்ட விஷயம் அல்ல. யுத்த களத்தில் வீசுவதற்காக பதிலாக, வெறும் இடத்தில் கத்தியை வீசியுள்ளார். அவரது பார்வையில், இது அணுகுண்டு. இந்த அணுகுண்டு, அவருக்கு எதிராக வெடிக்க கூடியது என, நான் கருதுகிறேன்.
கூட்டணி ஆட்சியானது காலத்தின் கட்டாயம்: மத்தியில் கடந்த 1977-ல், இந்திரா காந்தியை வீழ்த்த, அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி, சிதறி கிடந்த கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா என்ற ஒரு அணி உருவானது. இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் கட்டாயமானது. காலத்தின் கட்டாயத்தால் கூட்டணி ஆட்சி உருவானதே தவிர, ஜனநாயக அடிப்படையில் தேசிய கட்சி, தனது கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்ததன் மூலம் உருவானது இல்லை. இதுபோல், காலத்தின் கட்டாயத்தில்தான் கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும்.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளித்துக்கொண்டு, தங்களது கட்சியை மெல்ல மெல்ல நீர்த்துபோக செய்ய, விரும்பமாட்டார்கள். இதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கட்டாயத்தை உருவாக்க வேண்டும். போட்டியிடும் இடங்களை கூடுதலாக பகிர்ந்து கொள்கின்ற முயற்சி வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க விரும்பினால், அதிமுகவுக்கு குரல் கொடுக்க வேண்டும். 25 சதவீதம் வாக்குகளை கொண்ட கட்சி. இன்னும், கூடுதலாக கட்சிகள் சேர்ந்தால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்ற நிர்பந்தத்தை தருகின்றபோது, இடங்களை பகிர்ந்து கொள்வதிலும், அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதிலும் ஒரு கட்டாயம் உருவாகும்.
திமுக எதிர்ப்பு நெடி: முதல் அடியே எடுத்து வைக்காத தமிழக வெற்றிக் கழகம், அதிகாரத்தில் பகிர்வு என்பது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை, ஏற்புடையதாகவும் இல்லை. அதிமுக, பாஜகவை அவர் கண்டுகொள்ளவில்லை. நண்பர்களா, எதிரிகளா என்று தொண்டர்களுக்கு அடையாளப்படுத்தவில்லை. அவர், திமுகவை எதிரி என்று அடையாளப்படுத்தி உள்ளார். திமுக அரசை ஊழல் அரசு என்று விமர்சித்துள்ளார். திமுக எதிர்ப்பு நெடி, திமுக அரசுக்கு எதிரான அரசியல் என்பதுதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், இது பழைய அரசியல்தான். ஏற்கெனவே பல அரசியல் கட்சிகள் பேசியதுதான். அவருக்கு எந்தளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது விசிகவின் முதன்மையான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கான சூழல் அகத்திலும், புறத்திலும் தணியவில்லை. மக்களும் அதற்கு தயாராகவில்லை. மக்களை தயார்படுத்தாமல், எந்த கோரிக்கையும் வெல்லாது. கூட்டணி ஆட்சிக்கான தேவை குறித்த, ஒரு விழிப்புணர்வை மக்களிடத்தில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்தை நான் வழிமொழிகிறேன்” என்றார் திருமாவளவன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago