சென்னை: “திராவிட மாடல் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்த விஜய், மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்? அரசியல் களத்தில் அடி வைத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சினிமாக் கவர்ச்சி மூலம் மட்டுமே சிம்மாசனம் ஏறி விட முடியாது. நாட்டின் சவாலாக உருவெடுத்துள்ள பாசிச பாஜக எதிர்ப்பில் தனது உண்மைத் தன்மையைக் களத்தில் மெய்ப்பிப்பதே அதன் எதிர்காலத்துக்குச் சிறப்பு சேர்க்கும்,” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கிய நடிகர் விஜய் கட்சி அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தன் கட்சியின் கொள்கைகளை அறிவித்துள்ளார்
பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்றுள்ளார். விடுதலைப் போராட்ட வீரராகவும், அப்பழுக்கற்ற அரசியல் தலைவராகவும் சுதந்திர இந்தியாவின் சட்டங்களை இயற்றிய அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினராகவும் இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி தமிழுக்கே உண்டு என அரசியல் நிர்ணயச் சபையில் குரல் கொடுத்தவருமான கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்பை பின்பற்றத் தக்க ஆளுமையாக விஜய் ஏற்கவில்லை.
வேலு நாச்சியாரின் வெட்டுருவை வைத்த விஜய் கட்சி அவருக்குத் தோன்றாத் துணையாய் நின்று தோள் கொடுத்த ஹைதர் அலி - திப்பு சுல்தானின் பெயர்களை தனது உரையில் உச்சரிக்கத் தவறியது ஏன்? இத்தகைய அந்நியப்படுத்தும் அணுகுமுறை பாசிச பாஜகவின் அணுகுமுறை என்பதை விஜய் அவர்கள் உணர வேண்டும். திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு ஆகிய கருத்துகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் அது பாசிசத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கும் திமுகவை விமர்சிக்கும் உள்நோக்கத்தோடு இச்சூழலில் சொல்லப்படுகின்றன என்ற கருத்தையும் புறந்தள்ள முடியாது.
» கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் கவின்!
» ஓசூர் சாலையோரம் யாசகம் பெறும் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை மீட்க எழும் குரல்கள்
திராவிட மாடல் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்த விஜய், மக்களைப் பிளவுபடுத்தும் பாசிச பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்? விஜய் கட்சி அறிவித்த தறுவாயில் மத்திய பாஜக முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும்வகையில் இயற்றிய வக்பு திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து ஓர் அறிக்கையாவது வெளியிட்டுள்ளாரா? மணிப்பூரில் தொடர்ந்து நடத்தப்படும் கிறிஸ்துவ இனப்படுகொலைகளை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளாரா?
இந்தியா முழுவதும் மத்திய பாஜக அரசின் துணையோடு தலைவிரித்தாடும் பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகளை, அது பாசிசம் என்றால் இது பாயாசமா? எனக் கேட்டு கேலி செய்வது யாரை மகிழ்ச்சிப்படுத்த? பெரும்பான்மை சிறுபான்மை பிளவுவாத அரசியலில் கூடாது என்று விஜய் பேசி இருப்பது வஞ்சிக்கப்படும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. பெரும்பான்மை வாதத்தைத் தனது கோட்பாடாகக் கொண்டு பிளவுவாதத்தை இம்மண்ணில் நிலைநிறுத்துவது பாசிச பாஜக மட்டுமே.
பெரும்பான்மை வாதத்தின் மூலம் அறியாமை கொண்ட மக்களின் மனதில் வெறுப்பு அரசியலை விதைத்து அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்து வரும் பாஜகவும் பாசிச அபாயங்களுக்கு எதிராக ஒருங்கிணையும் சிறுபான்மை மதச்சார்பற்ற சக்திகளையும் சமப்படுத்துவது சரியான பார்வை அல்ல. வெற்று ஆரவாரங்கள் மட்டுமே வெற்றியாய் விளைந்து விடாது. வெற்றிகரமான நடிகராக இருந்தால் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது தமிழகத்தின் நவீன கால மூடநம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது.
இந்த மூடநம்பிக்கைக்கு முதன்மை காரணம் எம்ஜிஆர், கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்ததே ஆகும். இதனால் சில முன்னணி நடிகர்கள் தங்களையும் எம்ஜிஆராகப் பாவித்துக் கொண்டு அரசியலில் பாய்ந்து காணாமல் போயினர் என்பது தமிழ்நாட்டின் தற்கால வரலாறு ஆகும். எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் இல்லை. முதலில் அவர் ஒரு கொள்கை சார்ந்த அரசியல்வாதியாக இருந்து பிறகு நடிகராக ஆனார். நடிப்பின் மூலம் கிடைத்த செல்வாக்கைத் தனது அரசியலுக்கு மடை மாற்றினார்.
எம்ஜிஆரின் பாரம்பரியம் திடீர்த் தலைவர்களாக உருவாகும் நடிகர்களின் நடைமுறையும் அடிப்படையில் வேறுபட்டதாகும். எம்ஜிஆர் ஒரு படத்தில் கூட புகை பிடித்ததில்லை. எம்ஜிஆர் ஒரு படத்தில் கூட மது அருந்தியதில்லை. நடிகர் விஜய்யின் படங்கள் புகை, மது, ஆபாசம், உள்ளிட்ட சமூகத் தீமைகளை கொண்டாடுவதாக இருந்துள்ளன. அவை மக்களுக்கு நல்லொழுக்கத்தைத் தூண்டுவதாக இருந்ததில்லை.
எம்ஜிஆர் தனது எந்தப் படத்திலும் சிறுபான்மை மக்களைச் சிறுமைப்படுத்தியதும் பிளவுவாதத்தை முன்னெடுத்ததும் இல்லை. நடிகர் விஜய் தனது 'துப்பாக்கி' படம் மூலம் முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தும் 'ஸ்லீப்பர்செல்கள்' என்ற சொல்லைச் சுண்டியவர். இப்படத்துக்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் நடத்தியதும் பிறகு சில காட்சிகள் நீக்கப்பட்டதும் ஒலி நீக்கம் செய்யப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.
அரசியல் களத்தில் அடி வைத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சினிமாக் கவர்ச்சி மூலம் மட்டுமே சிம்மாசனம் ஏறி விட முடியாது. நாட்டின் சவாலாக உருவெடுத்துள்ள பாசிச பாஜக எதிர்ப்பில் தனது உண்மைத் தன்மையைக் களத்தில் மெய்ப்பிப்பதே அதன் எதிர்காலத்துக்குச் சிறப்பு சேர்க்கும். மக்களுக்கும் நன்மை செய்வதற்காக திரைத்துறையை விட்டு அரசியல் களத்தில் அடிவைப்பதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்க்கு நல்வாழ்த்துக்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago