சென்னை: தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என்பதை இலக்காக வைத்து, இன்றே உழைப்பை தொடங்குவதுடன், புகாருக்கு இடமின்றி பணியாற்ற வேண்டும் என்று திமுகவின் தொகுதி தேர்தல் பார்வையாளர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொகுதி பார்வையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களவை தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை பெற்றது போல சட்டப்பேரவை தேர்தல் வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நமது இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை, நீங்கள் இன்றுமுதலே தொடங்க வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைப்படி, தேர்தல் பார்வையாளர்
கள் பணிகளை தொடங்க வேண்டும். இந்த பணிகளில் மாவட்டச்செயலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களது வழிகாட்டுதல்படி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, தொகுதி பார்வையாளர்களுக்கு உண்டு.
தொகுதிகளில், முழுமையாக வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை கண்டறிந்து பணியாற்றுங்கள். உங்கள் யார் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த புகாரும் சொல்ல முடியாத அளவுக்கு பணியாற்றுங்கள். உங்களது ஒவ்வொரு அடியும், வெற்றியை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளால் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்திருக்கிறது. இந்த சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும். முறையாக பரப்புரை செய்யப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியால் பயனடைந்த மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களே நமக்கு மிகப்பெரிய பரப்புரையாளர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ‘எப்போதும் வென்றான்’ என்ற ஊரின்பெயர்தான் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
‘‘தொகுதி பார்வையாளர்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்காது என்று கவலைப்பட வேண்டாம். கட்டாயம் வாய்ப்பு வழங்கப்படும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளை கவனிக்க வேண்டும். இளைய தலைமுறை வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றும் முதல்வர் அறிவுறுத்தியதாக, கூட்டத்தில் பங்கேற்ற பார்வையாளர்கள் சிலர் கூறினர்.
மேலும், ஒன்றிய அளவில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவற்றை தொகுதி பார்வையாளர்களிடம் திமுக தலைமை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக தொகுதி பார்வையாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், திமுகவை தனது அரசியல் எதிரியாக அறிவித்திருந்தார். இந்த சூழலில் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago