விழுப்புரம்: பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், கொள்கைகளை விளக்கி விஜய் பேசியதாவது:
நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால், அவர் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே நம் கொள்கை. அடுத்து, நேர்மையான நிர்வாகம் தந்த காமராஜர், அரசியல் சாசனம் உருவாக்கிய அம்பேத்கர், வீரமிக்க பெண்களான வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள். இவர்கள் எல்லாம்தான் நம் கொள்கை தலைவர்கள். பிரிவினைவாத சித்தாந்தம் மட்டுமின்றி, ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும் கபடதாரிகள்தான் இப்போது ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.
» தவெக மாநாட்டுக்கு சென்றபோது விபத்து: பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு
» மகாராஷ்டிராவில் 'வாக்கு ஜிகாத்' வெற்றி பெறாது: துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
இனி என்னை ‘கூத்தாடி கூத்தாடி’ என்று கூப்பாடு போடுவார்கள். எம்ஜிஆர், என்டிஆரை அப்படி கூப்பிட்டவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்றைக்கும் அந்த தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என் சினிமா உச்சத்தை உதறிவிட்டு வந்துள்ளேன். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுதான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்களோடு மக்களாக நாம் களத்தில் இருக்கப் போகிறோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் நம்மை தனிப்பெரும்பான்மையோடு மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். மக்கள் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.
முன்னதாக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
லட்சக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்: தவெக மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. 4 மணி அளவில் மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.
பின்னர், கூட்டத்தின் மையத்தில் 800 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதையில் (‘ரேம்ப்’) நடந்து சென்றார். தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை அணிந்து கொண்டார். பின்னர், மேடையின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், பெரியார், திருப்பூர் குமரன், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், தியாகி அஞ்சலை அம்மாளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பாக, மாலை 4.24 மணிக்கு ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடல் ஒலிக்க, 100 அடி உயர கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியை விஜய் ஏற்றிவைத்தார்.
- எஸ்.நீலவண்ணன் / அ.முன்னடியான்
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago