சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் இன்று (அக்.27) காலை முதல் மாலை வரை ரத்து செய்யப்பட உள்ளன.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், இதுபோன்ற ரயில் சேவை மாற்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது என பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், கடற்கரை பணிமனையில் இன்று (அக்.27) அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ஆவடியில் இருந்தும், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் கொருக்குப்பேட்டையில் இருந்தும் இயக்கப்படும்.
அதேபோல, கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன. ஒருசில ரயில்கள் மட்டும்கடற்கரைக்கு பதிலாக சென்னைசென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக, சென்னை கடற்கரையில் இருந்துகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 4.15, 4.45 மணிக்கு தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, சென்னை பூங்காவில் இருந்து தாம்பரத்துக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இரு மார்க்கத்திலும் 20 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 75 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தவிர, அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் செல்லும் சில புறநகர் ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, மாலை 5 மணிமுதல் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அதிருப்தி: இதற்கிடையே, ரயில் சேவை ரத்து அறிவிப்புக்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், புதிய ஆடைகள், இனிப்பு வகைகள் ஆகியவை வாங்குவதற்கு தி.நகர் உட்பட சில முக்கிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை அன்று பயணிகள் சென்றுவருவார்கள். இதனால், அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதும்.
தற்போது, கடற்கரையில் இருந்து நேரடி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், குறிப்பிட்ட இடங்களுக்கு பேருந்துகள் மூலமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகைக்கு சில நாட்களே இருக்கும்போது, ரயில் சேவை ரத்து அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தவிர்க்க வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக 6 பேருந்துகள்: மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கூடுதலாக 6 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது. இதற்காக, கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago