வீண் இலவசங்கள் வேண்டாம்; இலவச கல்வி தாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

வீண் இலவசங்களை நிறுத்தி விட்டு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தரமான பள்ளிகளைக் கட்டி மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதி எந்த அளவுக்கு செய்து தரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 7837 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முழுமையாக இல்லை என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1442 பள்ளிகளில் பெண்கள் கழிப்பறைகள் இல்லை. 4278 பள்ளிகளில் ஆண்களுக்கான கழிப்பறைகள் இல்லை. 958 பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறைகளும், 1159 பள்ளிகளில் ஆண்களுக்கான கழிப்பறைகளும் இருக்கும் போதிலும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பதால் அவற்றால் எந்த பயனும் இல்லை. தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உருவெடுத்து வருகிறது; 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வறுமையே இருக்காது; ஒவ்வொரு தனிநபரின் ஆண்டு வருமானமும் ரூ. 6 லட்சமாக உயரும் என்று வெற்று முழக்கங்களை எழுப்பி வருபவர்களின் ஆட்சியில் அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பான கழிப்பறைகள் எந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன என்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் இப்புள்ளிவிவர அறிக்கை தான் சம்மட்டி அடி சாட்சியாகும்.

பள்ளிகளின் இன்றியமையாதத் தேவை கழிப்பறைகள் ஆகும். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிலிருந்தே பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்தும், கழிப்பறைகளை அமைப்பது பற்றியும் மகாத்மா காந்தி வலியுறுத்தி வந்தார். ஆனால், இந்தியா விடுதலையடைந்ததன் 68 ஆம் ஆண்டு விழா அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்பது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும். நிலவுக்கு விண்கலம் அனுப்புவதைவிட பள்ளிகளில் கழிப்பறை அமைப்பதே அவசர அவசியமாகும்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், உடனடியாக கழிப்பறைகளை கட்டித்தரும்படி கடந்த பல ஆண்டுகளாக ஆணையிட்டு வருகிறது. ஆனால், எந்த அரசும் அதை மதித்து செயல்படுத்துவதில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்துப் பள்ளிகளிலும் 2011 நவம்பருக்குள் தற்காலிக கழிப்பறைகளையும், டிசம்பருக்குள் நிரந்தர கழிப்பறைகளையும் அமைத்துத் தர வேண்டும் என்று ஆணையிட்டது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கில் மீண்டும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அடுத்த 6 மாதங்களில் கழிப்பறை இல்லாத பள்ளிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த 2 ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அ.தி.மு.க. அரசு மதிக்காததன் விளைவு தான் தமிழகத்திலுள்ள 20 விழுக்காட்டிற்கும் கூடுதலான அரசாங்க பள்ளிகளில் கழிப்பறை இல்லாத அவலம் நிலவுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 21&ஏ பிரிவின்படி கல்வி பெறும் உரிமை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலையில், கல்வி பெறும் உரிமையை அனுபவிக்க முடியாது என உச்சநீதிமன்றமே ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இலவசங்கள் மற்றும் மானியங்களுக்காக மட்டும் ரூ.1.70 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவிட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1880 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான தொகையை ஒதுக்கியிருந்தால் கூட அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பறைகளை பளிங்குக் கற்களில் கட்டியிருக்க முடியும். ஆனால், வாக்குவங்கி அரசியலில் காட்டும் ஆர்வத்தை வளரும் தலைமுறையின் நலனில் காட்ட அரசு தயாராக இல்லை.

அதுமட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புறப் பகுதிகளில் 45% மக்களும், கிராமப்புறங்களில் 73% மக்களும் கழிப்பறை வசதி இல்லாததால் திறந்த வெளிகளை கழிப்பறையாக பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று தான். இத்தகைய அவலங்கள் தான் கடந்த 48 ஆண்டுகளாக தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்துவரும் திராவிடக் கட்சிகளின் சாதனைகள் போலிருக்கிறது.

குழந்தைகளின் கல்விக்காகவும், மக்களின் சுகாதாரத்திற்காவும் செலவிடப்படும் தொகை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக செய்யப்படும் முதலீடு ஆகும். எனவே, வீண் இலவசங்களை நிறுத்தி விட்டு, அதற்காக செலவிடப்படும் நிதியில் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான பள்ளிகளைக் கட்டி, மாணவர்களுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்கவும், மக்களுக்கு கழிப்பறைகளை இலவசமாக கட்டித்தரவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்