“மதுரையில் 8 இடங்களில் மட்டுமே வீடுகளுக்குள் மழைநீர்...” - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “மதுரையில் தொடர்ந்து பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சினையில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.26) அண்ணா அறிவாலயம் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை என்ன என்ற கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர், “தொடர்ந்து பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில்தான் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சினையில்லை.

இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.

வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா? கோவையிலும் பெய்து கொண்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, “அப்படி ஒன்றும் இல்லை. தென் மாவட்டங்களில்தான் மழை பெய்து கொண்டிருக்கிறது” என்றார். சென்னையில் மழை பெய்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு, “அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம்,” என்றார்.

மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற “எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டிவி-யில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை,” என்றார்.

மத்திய அமைச்சருடன் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இன்றைக்கு நடந்த ஆய்வுக் கூட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆமாம், ஏற்கனவே ஒன்றிய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் இன்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்