சென்னை: “தமிழக அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், நானும், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர், சேர்மன் , உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.
பருவ மழை தொடர்கின்ற நிலையில், மழை நீர் தேங்குகிற இடங்களில் உடனே அவற்றை வடியச் செய்வது, போக்குவரத்துக்கும் அத்தியாவசியத் தேவைக்கும் பாதிப்பின்றி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடைபெற்று வரும் நிலையில், இதனைப் பொறுக்க முடியாமலும், தாங்கள் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததாலும் எதிர்வரிசையிலே இருப்பவர்கள், அதிலும் தங்களுடைய பத்தாண்டுகால மோசமான ஆட்சிக்காலத்தில், கடைசி நான்கு ஆண்டுகளில் படுமோசமான நிர்வாகம் நடத்தியவர்கள், மக்கள் மீதான அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.
பொதுவாழ்வில் விமர்சனங்கள் சர்வசாதாரணம்தான் என்பதால் எதிர்த்தரப்பின் ஆதாரமற்ற விமர்சனங்களைக் கடந்து, திராவிட மாடல் அரசு தனது மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் அக்டோபர் 22-ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சேலத்திற்குச் சென்றேன். அண்டை மாநிலமான கேரளாவில் ஏடிஎம் மையங்களைக் கொள்ளையடித்துவிட்டு, தமிழகத்துக்குள் வந்த கொள்ளையர்களைப் பிடிப்பதில் திறமையாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறையினரை ஏற்கெனவே பாராட்டி கடிதம் எழுதியிருந்தேன். டிஜிபி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலும் பாராட்டியிருந்தேன். நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தீரமிக்க காவல்துறையினரை நேரில் சந்தித்துப் பாராட்டினேன்.
நாமக்கல் மாவட்டத்தில் 19.50 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டதுடன், பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற விழாவில் 16 ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன். ஆதிதிராவிடர் நலத்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன் முன்னிலை வகித்தார்.
ஆதிதிராவிட மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான சமூக நீதித் திட்டங்களை நிறைவேற்றி வருவதுதான் திராவிட மாடல் அரசு. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வர் பொறுப்பினை வகித்த உங்களில் ஒருவனான நான் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்களுக்கான 3% உள்ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை முன்மொழியும் வாய்ப்பினைப் பெற்றேன். கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அந்த இடஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் காணும்போது அவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களில் ஒருவனாகப் பெருமை கொள்கிறேன்.
முதல்வராக முதன்முறையாக நாமக்கல் சென்றபோது, அங்குள்ள அருந்ததியர் மக்களின் வசிப்பிடம் சென்று அவர்களின் நலன்களைக் கேட்டறிந்து, கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டேன். அவற்றை நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்தமைக்கு அவர்கள் என்னிடம் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். நாமக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியினை வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்தேன்.
விழாவில் திரண்டிருந்த மக்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் நேரலையில் நிகழ்வைப் பார்த்த பொதுமக்களும் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சிப் பணிகளையும் ஆய்வு செய்வேன்.” என்று முதல்வர் அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago