கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கும் முறையில் திடீர் மாற்றம் ஏன்? - அதிகாரிகளிடம் ஆட்சியர் கேள்வி

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி: கூட்டுறவு சங்கங்களில் ஏற்கெனவே கடன் வழங்கும் முறையில் திடீரென மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பது ஏன் என்று தூத்துக்குடியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது ஆட்சியர் இளம்பகவத் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்.

விடுபட்டவர்களுக்கு காப்பீட்டு தொகை: அப்போது அவர்கள் கூறியதாவது: 2023-24-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகை சில விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது. சில விவசாயிகளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே பணம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வந்தாலும், இதுவரை பணம் கிடைக்கவில்லை. டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம் விற்பனை நிலையங்களில் விலை பட்டியல் வைக்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளின் போது மகசூல் இழப்பை கொண்டு பயிர் காப்பீட்டு தொகை கணக்கிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2023ம் ஆண்டு பயிர் காப்பீடு தொகை விடுபட்டவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். கடந்த ஆண்டு மழை வெள்ளத்துக்கு பிறகு காப்பீடு செய்தவர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. அதனை விரைந்து வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு புதிதாக பத்திரங்களில் எழுதி கொடுக்க வேண்டும். சாட்சிகள் கையெழுத்திட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இதனால் விவசாயிகள் கடன் பெறுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

கால்நடைகளுக்கு காப்பீடு: சாத்தான்குளம் பகுதியில் மானிய விலையில் தென்னங்கன்று வழங்க வேண்டும். இதில் நெட்டை குட்டை தென்னங்கன்று விலை அதிகமாக உள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள் நோய் தாக்கி இறப்பதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கால்நடைகளை கணக்கெடுத்து காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் தீவிபத்து ஏற்பட்ட போது, தீயணைப்பு வாகனங்கள் வர தாமதமானது. இதனால் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தெரிவித்தோம். இதனால் அதிக வாகனங்கள் வந்தன. முதலில் வந்த வாகனம் சரிவர இயங்கவில்லை. அது போன்ற வாகனங்களை சரி செய்ய வேண்டும். பின்னர் நல்ல வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டதால் தீ அணைக்கப்பட்டது” இவ்வாறு அவர்கள் கூறினர்.

சூரியசக்தி மின் மோட்டார்: கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசும்போது, கடந்த கூட்டத்தில் கூறப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளின் செல்போனுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் பல திட்டங்களில் புதிதாக விவசாயிகள் சேர்ந்து பயன்பெற்று உள்ளனர். அதிகபட்சமாக முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் 112 விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். அதே நேரத்தில் பயிறு சாகுபடி திட்டங்களில் குறைந்த அளவு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு அதிக இடங்கள் உள்ளன. புதிய விவசாயிகள் வர வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும். சூரியசக்தி மின் மோட்டார் திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் எந்த நிறுவனமும் வாரண்டி காலகட்டத்தில் பழுதை சரிவர நீக்கவில்லையென்றால், அந்த நிறுவனம் தவிர்க்கப்படும். இலவச மின்சார இணைப்பு கேட்டு நீண்ட நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.” என்றார்

எளிதாக கடன் பெற நடவடிக்கை: பயிர் காப்பீட்டு திட்டத்தில் கணக்கீடு செய்யும் முறையில் பிர்கா அளவில் 10 இடங்களில் அளவீடு செய்வதை 16 இடங்களிலும், கிராம அளவில் 4 இடங்களில் அளவீடு செய்வதை 10 இடங்களிலும் அளவீடு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பல பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது. பயிர்காப்பீடு தொகை விடுவிப்பதில் இணைதளம் பிரச்சினையால் 2 மாதம் தாமதமாவதை ஏற்க முடியாது. 2 மாதங்கள் போர்ட்டல் வேலை செய்யவில்லை என்றால் அது இணை தளமே இல்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொழில்நுட்ப கோளாறா, மனித குறைபாடா என்பது தெரியவரும்.

கூட்டுறவு சங்கங்களில் ஏற்கெனவே கடன் வழங்கும் முறையில் திடீரென மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பது ஏன், அதற்கான ஆணை இருந்தால் கூட்டுறவு அதிகாரி தாருங்கள். விவசாயிகள் எளிதாக கடன் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க செயலாளர்களும், விவசாயிகளும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். செயலாளர் பதவி காலியாக உள்ள சங்கங்களில் செயலாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நெட்டை, குட்டை தென்னங்கன்று வளர்ப்பது நல்லது. விலை குறைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் கூறினார்.

கூட்டத்தில், காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி படங்களுடன் பங்கேற்ற விவசாயிகள்.

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்: மானாவாரி பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர் கே.பிரேம்குமார் மற்றும் விவசாயிகள் காட்டுப் பன்றிகள், மான்கள் படங்களுடன் கலந்து கொண்டனர். புதூரில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்த விவசாயி அய்யரப்பனுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா, கீழ் தாமிரபரணி, கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்