“பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும்” - இபிஎஸ் நம்பிக்கை

By த.சக்திவேல்

மேட்டூர்: “திமுக கூட்டணி வலுவான கூட்டணியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த வனவாசியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (அக்.23) நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: “ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர முடியாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் மட்டுமே திமுகவின் தலைவராக முடியும். ஜெயலலிதா கூறியது போல், எனக்குப் பின்னும் அதிமுகவை யார் வேண்டுமானாலும் வழிநடத்துவார்கள்.

அதிமுக சுதந்திரமாக செயல்படுவதால் தான் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கூட கட்சி மறையவில்லை. அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. இதனால் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்தது. நான் கனவு காணவில்லை. ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். 2019- ஆண்டில் நடைபெற்ற எம்பி தேர்தலை காட்டிலும் கடந்த தேர்தலில் நாமக்கல்லில் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதன்மூலம் நாமக்கல்லில் திமுகவுக்குதான் சரிவு; அதிமுகவுக்கு அல்ல. நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு. கூட்டணி இல்லாமல் அதிக வாக்குகள் பெற்ற அதிமுகதான் வலுவான கட்சி.

பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை மறந்து விட்டனர். மத்தியில், குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம். அதிமுக எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. திமுக ஒரு சாதனையாவது செய்துள்ளதா?

நாமக்கல் மாவட்டத்துக்கு நிறைய திட்டத்தை கொண்டு வந்தது அதிமுகதான். திமுகவின் 41 மாத ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு ரூ.40 கோடிதான் ஒதுக்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்துக்குத்தான் அதிக நிதியை ஒதுக்கி பணிகளை செய்துள்ளோம். கனவு உலகத்தில் மிதக்கும் முதல்வர், நாமக்கல் மாவட்டத்துக்கு திமுகதான் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுக செய்துள்ள திட்டங்களை நான் புள்ளி விவரத்தோடு சொல்வேன். நெஞ்சை நிமிர்த்தி மக்களை சந்திக்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக தான். நாடு முழுவதும் பேசும் ஆட்சி அதிமுக ஆட்சிதான். உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரலாம். ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகள் கடுமையாக உழைத்து அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுகவின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னாலே போதும் அதிமுக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

திமுக கூட்டணி வலுவான கூட்டணியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், அதிமுகவுக்கு ஆட்சி, அதிகாரம் முக்கியமில்லை. மக்களுக்கு சேவை செய்வதே அதிமுகவின் நோக்கம். யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை.

பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026 - ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அதிமுகவால்தான் தர முடியும். 2021-ம் ஆண்டு மொத்தமாகவே ரூ.5.18 லட்சம் கோடி கடன் தான் இருந்தது. தமிழகத்தை அதிமுக கடனாளி ஆக்கிவிட்டதாக கூறி வல்லுநர்கள் குழுவை அமைத்த திமுக அரசு, புதிதாக ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.

கரோனா காலத்தில் 1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையில் ரூ.40,000 கோடி செலவு இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கலால் வரி, ஜிஎஸ்டி என 56 ஆயிரம் கோடி என பலவகைகளில் அரசுக்கு கூடுதலாக வருவாய் வந்தும் கூட ஏன் 3 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள்? ஸ்டாலினை போல் நான் பொம்மையாக இருக்க மாட்டேன். அரசுக்கு வரும் வருவாய் முழுமையாக எனக்கு தெரியும். அறிவிப்பது எல்லாம் சாதனையா? இந்தியாவிலேயே ஒரே திட்டத்துக்கு ரூ.67 ஆயிரம் கோடி மத்தியில் இருந்து நிதி பெற்றது அதிமுக அரசுதான்.

அறநிலையத்துறையில் இருந்து வருமானம் வருவதை பார்த்து 10 கல்லூரிகளை உருவாக்கி செலவு செய்து வருகின்றனர். அறநிலையத் துறை வருமானத்தை கோயில்களுக்குத்தான் செலவு செய்ய வேண்டும். சாமி பணத்தை கூட விட்டு வைக்கவில்லை. இதனை 2026-ல் இந்த சாமி வந்து கேட்பார். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு வருகிறது என்று பாருங்கள். எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக திமுக அமைப்புச் செயலாளர் நீதிமன்றத்துக்குச் சென்றார். பிறகு அவரே அந்த வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்றார்.

ஆனால், நான் அந்த வழக்கை எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபித்தேன். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடத்துக்கு ரூ.230 கோடிக்கு டெண்டர் விட்டுவிட்டு ரூ.410 கோடி செலவு செய்துள்ளார்கள். சிறு வயதில் இருந்து பல வழக்குகளை சந்தித்து வெற்றி பெற்றவன் நான். போட்ட வழக்கை திரும்ப பெறுபவன் அல்ல. அதிமுக தொண்டனைக்கூட உங்களால் தொட்டுப் பார்க்க முடியாது ஸ்டாலின். அதிமுகவை குறைத்து மதிப்பிட்டு விட்டு உங்களால் நிம்மதியாக இருந்துவிட முடியாது,” என்று அவர் பேசினார்.

மேலும் வாசிக்க>> “திமுக கூட்டணியில் விவாதங்கள் உண்டு; விரிசல் இல்லை” - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்