சென்னை: “எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.23) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரியின் மகனுமான கோ. ஸ்டாலின் – யுவஸ்ரீ ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “திமுகவைப் பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரையில், நாம் என்றைக்கும் இருப்போம். மக்களுக்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
அதனால்தான், ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திமுக, இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது. என்னென்ன உறுதிமொழிகளை தந்தோமோ, தந்த உறுதிமொழிகள் மட்டுமல்ல, தராத திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இன்றைக்கு அரசு செய்து கொண்டிருக்கிறது. மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு திமுக இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக்கூடிய பழனிசாமி பொறாமை தாங்க முடியாமல், திமுகஅரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து மக்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருக்கிறதே; இன்னமும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கின்ற பொறாமையின் காரணமாக செல்லாக்காசாக இருக்கக்கூடிய பழனிசாமி இன்றைக்கு திமுகவின் ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
» ‘ரோலக்ஸ்’ படம் எப்போது? - சூர்யா பதில்
» ‘மீண்டும் ஆட தயார்’ - இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விரும்பும் வார்னர்
அதோடு மட்டுமல்ல, திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது; இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பழனிசாமயைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!
எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல. தன்னுடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்ற யோக்கியதை இல்லை.
வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய கட்சியைப் பார்த்து வளர்ந்து இன்றைக்கு மக்களிடத்தில் ஓங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கக்கூடிய திமுகவையும், அரசையும் பார்த்து, இன்றைக்கு ஜோசியம் பார்த்து கொண்டிருக்கக்கூடிய பழனிசாமி அவ்வாறு கூறியிருக்கிறார். திமுகவைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்போது ஆட்சி என்கிற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கும் மக்களை சந்தித்து, மக்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து அந்தப் பணிகளை செய்கிறோம்.
சென்னையில் மழை வந்தது. முதல்வராக நான் வந்தேன். துணை முதல்வராக இருக்கும் உதயநிதி வந்தார். அமைச்சர்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தார்கள். குறைகளை கேட்டார்கள். பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்கள். ஆனால், மழை வந்தவுடன் சேலத்துக்குச் சென்று பதுங்கியவர்தான் பழனிசாமி. அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டிருக்கிறார்.
அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். திமுக-வை பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாக சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை,” என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago