தமிழகத்தில் மாம்பழம் சாகுபடி செய்யப்படும் முக்கிய மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டமும் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பங்கனப்பள்ளி, அல்போன்சா, பெங்களூரா, ருமானி, இமாம்சந்த் , செந்தூரம், நீலம் மற்றும் ஜவ்வாரி உள்ளிட்ட மாம்பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கி, ஏப்ரல், மே மாதங்களில் மகசூலுக்குத் தயாராகிவிடுவது வழக்கம். தற்போது மாம்பழ சீசன் தொடங்கினாலும் பங்கனப்பள்ளி, ஜவ்வாரி, செந்தூரம் உள்ளிட்ட சில ரகங்கள் மட்டுமே, குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், பொன்னேரி, செங்குன்றம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், சில்லறை விலையில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை மாம்பழங்கள் விற்பனையாகின்றன.
மாம்பழ சீசன் தொடங்கிவிட்ட போதிலும், அதிக வெயில் காரணமாக மாம்பழம் மகசூல் குறைவு என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த நாகப்பன் என்பவர் தெரிவித்ததாவது:
மாம்பழ சாகுபடிக்கு தண்ணீர் மற்றும் மிதமான வெயில் உகந்தது. ஆனால், ஆரம்பாக்கம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்துக்குச் சென்றுவிட்டது. கோடை மழையும் இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை. மேலும், வெயிலும் அதிகமாக உள்ளது.
இதனால், பூக்கள் பூக்கத் தொடங்கியபோதே பெருமளவில் கருகி உதிர்ந்து விட்டன. மீதமிருந்த பூக்களில் காய்கள் பிடிக்கத் தொடங்கினாலும், அவற்றிலும் கணிசமானவை அதிக வெயில் காரணமாக வெம்பி கீழே விழுந்து விட்டன. இதனால், மகசூல் குறைவாகவே உள்ளது என்றார்.
அதே பகுதியைச் சேர்ந்த கலாநிதி தெரிவித்ததாவது: இம்மாவட்டத்தில், ஆரம்பாக்கம் பகுதியில்தான் அதிக அளவில் மாம்பழ சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு வெயில் காரணமாக, பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு மாம்பழங்கள் தயாராகவில்லை.
இப்போது சந்தையில் கிடைக்கும் பழங்களில் பெரும்பாலானவை முற்றாத நிலையில் அறுக்கப்பட்டு, செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுபவை. அதேநேரத்தில் இந்த ஆண்டு மகசூல் குறைவுதான். ஒரு ஏக்கருக்கு, பராமரிப்பு செலவுக்காக 75 ஆயிரம் வரை செலவு செய்யும் எங்களுக்கு, 3 அல்லது 4 டன் மகசூல் கிடைத்தால்தான் லாபம் கிடைக்கும்.
ஆனால், தற்போதுள்ள நிலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் மகசூல்தான் கிடைக்கும். இது பராமரிப்புச் செலவைக்கூட ஈடுகட்டாது. இதனால் மாம்பழ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் மிகுந்த கவலையில் உள்ளோம் என்றார்.
திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் பேசும்போது, ’‘மாவட்டத்தில் மாம்பழ சீசன் ஜூலை மாதம் வரை உள்ளது. எனவே, மாம்பழ மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல், மாம்பழ மகசூல் ஒரு வருடம் அதிக அளவில் இருந்தால், மறு ஆண்டு குறைய வாய்ப்புள்ளது. இது இயற்கையான ஒன்றுதான்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago