தமிழகக் கடற்கரைகளிலேயே அதிகமான மனித உயிர்களைப் பலிவாங்கும் இடமாகச் சென்னை மெரினா கடற்கரை மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 64 பேர் பலியாகியுள்ளனர்.
ஆசியாவிலேயே அழகிய கடற்கரையை சென்னை மெரினா கடற்கரையாகும். சென்னையில் வசிக்கும் மக்களுக்கு வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக மெரினா கடற்கரை இருக்கிறது. விடுமுறை நாட்களில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் குளித்து, விளையாடி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், அவ்வாறு கடலில் விளையாடுபவர்கள் அதிகமான ஆழத்தில் செல்லும்போது மிகப்பெரிய அலைகளில் சிக்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இதைத் தடுக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டு, கடலில் குளிப்பவர்களை ஒழுங்குபடுத்துகின்றனர். ஆனால், அதையும் மீறி அதிதீவிர உற்சாகத்தில் குளிக்கும் இளைஞர்கள் சிலர் தங்கள் உயிரை மாய்க்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இதைத் தடுக்கும் வகையில் சமீப காலமாகக் கடலோர பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கடலில் குளிப்பவர்களைக் கண்காணித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் கடலில் குளிக்கச் சென்று பலியான சம்பவம் சென்னை மெரினாவில் அதிகமாக நடந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டில் 40 பேரும், 2017-ம் ஆண்டில் 19 பேரும், 2018-ம் ஆண்டில் இதுவரை 5 பேரும் மெரினாவில் குளிக்கச் சென்று பலியாகி இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்த இடத்தில் சென்னைக்கு அருகே இருக்கும் மாமல்லபுரம் கடலில் குளிக்கச் சென்று அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டு 14 பேரும், 2017-ம் ஆண்டு 16 பேரும், இந்த ஆண்டில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
விழுப்புரம் கடலில் கடந்த 2016-ம் ஆண்டு 9 பேரும், கடந்த 2017-ம் ஆண்டில் 9 பேரும் பலியாகி இருக்கிறார்கள். கடலூர் கடலில் கடந்த 2016-ல் 5 பேரும், 2017-ம் ஆண்டில் 3 பேரும், 2018-ம் ஆண்டில் இதுவரை ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள்.
நாகப்பட்டினம் கடலில் கடந்த 2016-ல் 16 பேரும், கடந்த ஆண்டில் 12 பேரும் இறந்துள்ளனர். வேதாரண்யத்தில் கடந்த இரு ஆண்டுகளில் கடலில் குளித்து 11 பேரும், முத்துப்பேட்டையில் கடந்த ஆண்டு 2 பேரும் இறந்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடலில் கடந்த 2016-ல் 19 பேரும், கடந்த ஆண்டு 20 பேரும் கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி கடலில் கடந்த 2016-ம் ஆண்டு ஒருவரும், கடந்த ஆண்டு15 பேரும், இந்த ஆண்டு இருவரும் இறந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கடலோரப் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், ''எங்களின் எச்சரிக்கையையும் மீறி கடலில் குளிக்கச் சென்று மூழ்குபவர்கள்தான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறார்கள். பெரும்பாலும் வெளியூரில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி சிக்கிக் கொள்கின்றனர். இங்குள்ள மீனவர்கள், போலீஸார் முடிந்தவரை கடலில் சிக்கியவர்களை மீட்கிறார்கள். அதிலும் மெரினா கடற்கரை என்பது, நதிகளின் முகத்துவாரத்தில் இருப்பதால், அங்கு அலைகளின் வேகம் அதிகமாகவும், ஆழமாகவும், நீச்சல் அடிப்பதும் கடினமாக இருக்கும். சென்னை கடற்கரையைத் தவிர்த்து கடலூர், வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்கரையும் மிகவும் ஆபத்தானவை.
சுற்றுலாத்துறையுடன் இணைந்து கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக ரோந்துப் பணியிலும், உயர்கோபுரம் அமைத்தும் பயணிகளைக் கண்காணிக்கிறோம். அதிகமான படகுகள், உயிர்களைப் பாதுகாக்கும் நீச்சல் தெரிந்தவர்கள் ஆகியோர் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 21 படகுகள் இதற்காகவே உள்ளன. சென்னையில் இரு படகுகள் இருக்கின்றன. அடுத்து வரும் மாதங்களில் 19 படகுகள் வரவுள்ளன. மெரினா கடற்கரையில் மட்டும் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்க இருக்கிறோம், உயிர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நபர்களையும் நியமிக்க இருக்கிறோம்.
கடலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்க உடனடியாக கடற்கரை பாதுகாப்பு எண் 1093க்கு அழைக்கலாம். உடனுக்குடன் உதவிக்கு வருவார்கள். கடந்த ஆண்டு கடலில் சிக்கித் தவித்த 261 பேர் மீட்கப்பட்டுள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago