நாகர்கோவிலில் தனியார் குப்பை அள்ளியதில் ஊழல்?

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவிலில் தனியார் மூலம் குப்பை அகற்றப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், நகர்மன்றம் இப்பிரச்சினையில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என மறுத்துள்ளது.

நாகர்கோவிலில் அண்மையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில், குப்பை அள்ள தனியாருக்கு டெண்டர் விட்டதில் கோடிகளில் ஊழல் நடைபெற்றிருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இவ்விவகாரத்தில் பல்வேறு அமைப்பினரும் கண்டன போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை தர்ணா போராட்டம் அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

ரூ. 6.86 கோடி மோசடி

அக்கட்சியின் நாகர்கோவில் வட்டாரக் குழு செயலாளர் அந்தோணி கூறும்போது, ‘நாகர்கோவில் நகராட்சியின் 2013-14-ம் ஆண்டுக்கான தணிக்கையை பூர்த்தி செய்த உடன், தணிக்கை கூடுதல் ஆய்வாளர் அனுப்பியுள்ள கடிதம் நகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அரசு ஆணைகளின்படி நிர்வாக அனுமதி, தொழில்நுட்ப அனுமதி பெறாமல் 34 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை வெளி மாநிலத்தை சேர்ந்த கோபிநாத ரெட்டிக்கு வழங்கி ரூ.6.86 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.

நடவடிக்கை வேண்டும்

பொது சுகாதாரப் பணிகளை தனியார் மூலம் நிறைவேற்றியதில், நகராட்சிக்கு ரூ.1,45,29,527 கூடுதலாக செலவாகியுள்ளது. தனியாருக்கு ஆதரவாகவும், அரசு ஆணை, விதிமுறைக்கு முரணாகவும் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதில் ரூ.32,41,433 இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தணிக்கைத் துறை சொல்கிறது.

இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி புதன்கிழமை நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றார்.

40 பணியிடம் காலி

நகராட்சித் தலைவி மீனாதேவ், ஆணையாளர் (பொ) ஜானகிராமன் கூறும்போது, ‘நாகர்கோவிலில், 18 வார்டுகள் நகராட்சி துப்புரவு பணியாளர் களால் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த வார்டுகளில் மொத்தம் 26,551 வீடுகள் உள்ளன. 95,190 பேர் வசிக்கின்றனர். இங்கு குப்பை அகற்ற மாதம் ரூ.40 லட்சம் செலவு செய்யப்படுகிறது. நகராட்சி சார்பில் இந்த பணிகள் செய்ய 319 பணியாளர்கள் தேவை. இதில் 40 பணியிடம் காலியாக உள்ளது.

தனியார் பணி

தனியார் பராமரிப்பில் 34 வார்டுகள் உள்ளன. இவற்றில் 52,478 வீடுகள் உள்ளன. தனியார் மூலம் இந்த பணிகள் செய்ய மாதம் ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகிறது. இதே பணியை நகராட்சி பணியாளர்களை வைத்து செய்தால் மாதம் ரூ.60 லட்சம் முதல் ரூ.65 லட்சம் வரை செலவாகும்.

முறைகேடு இல்லை

6 மாதங்களுக்கு 34 வார்டுகளுக்கு தனியார் மூலம் குப்பைகள் அள்ள டெண்டர் விட்டு ரூ.2 கோடியே 72 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு ரூ. 5.25 கோடி தான் 34 வார்டுகளுக்கு செலவாகும்.

அகில இந்திய அளவிலான டெண்டரில் பெங்களூர் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளி ஏற்கப்பட்டு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகராட்சி முன்பு, 29 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருந்தது. தற்போது மறுசீரமைப்பில் 49 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது.

தமிழகத்தில் 19 நகராட்சிகளிலும், 2 மாநகராட்சிகளிலும் தனியார் மூலம் குப்பை அகற்றப்படுகிறது. அதுபோல் தான் நாகர்கோவில் நகராட்சியிலும் தனியார் மூலம் குப்பை அகற்றப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை’என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE