கமலுக்கும் ரஜினிக்கும் உடன்பாடு உள்ளதாக சந்தேகிக்கிறேன்: விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து

By க.சக்திவேல்

கமல்ஹாசன் கட்சி தொடங்கும் முன்பே அவரை அழைத்து விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியவர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடக்க விழாவில் மேடையேற்றப்பட்ட மிகச்சிலரில் இவரும் ஒருவர். இப்படி ஆரம்பம் முதல் அவரை ஆதரித்து வந்தவர், கர்நாடக முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்ததை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ‘கமலின் சுயநல நடவடிக்கை மன்னிக்க முடியாத செயல்’ என கூறிய அவர், ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கட்சி தொடங்குவதற்கு முன்பே கமல்ஹாசனை நீங்கள் ஆதரித்தீர்கள். ஏன்?

ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்ப்பவன் நான். அதேநேரத்தில், கமலின் அரசியல் பார்வை அறிவார்ந்து இருந்தது. அந்த அடிப்படையில்தான் அவரோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று எண்ணி பழகி வந்தோம். விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள கமல்ஹாசன் விரும்பினார். விவசாயத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துகளை கேட்டுதான் இறுதி முடிவுக்கு வர வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் அவருடைய தொடக்க கால நடவடிக்கைகள் இருந்தன.

விவசாயிகளின் போராட்ட களத்தில் வலுவான பின்புலம் மிக்க தலைவர்களின் உதவி தேவைப்பட்டது. எனவேதான் அவரோடு இணைந்து செயல்பட்டோமே தவிர, கமல்ஹாசனின் அரசியல் பார்வையோடு நான் எந்தவித நட்பையும் வைத்துக் கொள்ளவில்லை.

திடீரென கமல்ஹாசனை நீங்கள் எதிர்க்க காரணம் என்ன?

கமலை நான் எதிர்க்க எந்த உள்நோக்கமும் கிடையாது. நீண்ட கால கோபமும் கிடையாது. காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்களை அழைத்து கமல்ஹாசன் கூட்டம் கூட்டினார். அதில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால், திடீரென கமல்ஹாசனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தீர்மானத்துக்கு மாறாக அவரது நடவடிக்கை அமைந்தது. காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கிய பிறகு, பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தவறானது. தீர்வு வராததற்கு முன்பு பேச்சுவார்த்தைக்கு போகலாம். உச்ச நீதிமன்றம் மூலம் தீர்வு வந்த பிறகு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பதை எப்படி ஆதரிக்க முடியும். எங்கள் தீர்மானத்துக்கு முரணாக அவரது செயல்பாடு அமைந்ததால் எதிர்க்கிறேன்.

குமாரசாமியை சந்திக்கும் முன்பே இதுபற்றி அவரிடம் பேசியிருக்கலாமே?

குமாரசாமியை சந்திக்க போவதாக தகவல் வந்தபோதே, காவிரி பிரச்சினை பற்றி குமாரசாமியிடம் பேச வேண்டாம் என்று கமலுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை மீறி அவர் சந்தித்தார். குமாரசாமியை சந்தித்த பிறகு பல்வேறு கட்சியினர் கமலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகாவது கமல்ஹாசன், ‘தமிழக நலனுக்கு எதிராக எனது கருத்து இருக்குமானால், அதை நான் வாபஸ் பெறுகிறேன்’ என்று தெரிவித்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை.

சில விவசாயிகள் சங்கத்தினர் கமல்ஹாசன் குமாரசாமியோடு பேசியதற்கு ஆதரவு தெரிவித் துள்ளார்களே?

கமல்ஹாசன் ஒரு பிரபலம் என்பதால் அவரை சிலர் சந்தித்து பாராட்டலாம். ஆனால், அறிவார்ந்த அரசியல் நடத்த வேண்டும் என்று நினைப்பவர் பலரும் எதிர்க்கும் விஷயத்தில் இதுபோன்ற பாராட்டுகளை விரும்பக்கூடாது. கமல்ஹாசனுக்கு வீரவாள் கொடுக்கும் அளவுக்கு அவர் என்ன சாதித்துவிட்டார். அவர் பேச்சுவார்தை நடத்தி தண்ணீரைப் பெற்றுத்தந்தாரா இல்லை தண்ணீரை பெற்றுத்தரும் வாய்ப்பை இவரால் ஏற்படுத்தித் தர முடியுமா, அவரது பேச்சுவார்த்தையால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. மக்கள் பிரச்சினைக்காக அவர் தலையிடும் முதல் விஷயமே விமர்சனத்துக்கு உள்ளாகும்போது, அவர் அந்த பாராட்டை பெற்றுகொள்வதன் அர்த்தம் என்ன. குறுகிய காலத்திலேயே அவரிடம் இருக்கும் முதிர்ச்சியற்ற தன்மை வெளிப்பட்டுவிட்டது.

ரஜினி, கமலுக்கு காவிரி பிரச்சினை பற்றிய புரிதல் இல்லையா? அவர்களது பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறீர்களா?

ரஜினி, கமலுக்கு காவிரி பிரச்சினையின் வரலாறு தெரிய வாய்ப்பு இல்லை. இருவரும் திரைப்பட கலைஞர்கள். இதில், கமல்ஹாசன் வேறுபட்டவராக இருப்பார் என்று நம்பி, குறுகிய காலத்தில் அவரோடு இணைந்து பணியாற்றினோம். அந்த நம்பிக்கையை அவர் வீணடித்துவிட்டார். ரஜினிக்கும் கமல்ஹாசனுக்கும் தொழில்ரீதியாக உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. அனைவரும் எதிர்க்கும் கமல்ஹாசனின் நடவடிக்கையை, ரஜினி ஆதரிக்கிறார் என்றால், ‘காலா’ படத்துக்காக அப்படி கூறியிருக்கலாம். கமலும், ரஜினியும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மேலானவர்கள் இல்லை. அந்த அளவுக்கு இருவரும் வலிமை உள்ளவர்களும் இல்லை.

இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்