உள்ளாட்சி இடைத்தேர்தல்: பாஜக ஆலோசனை

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் பாஜக மாநில தேர்தல் குழு ஆலோசனை நடத்தவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து 3-ம் தேதி அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் அரக்கோணம், விருத்தாசலம், கடலூர், சங்கரன்கோவில் நகராட்சிகள் உட்பட காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலில் பாஜகவின் நிலை குறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாஜக மாநில தேர்தல் குழு, அந்தந்த மாவட்ட நிர்வாகி களுடன் செப்-1 மற்றும் 2-ம் தேதி கலந்து ஆலோசிக்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜக தொண்டர்கள் அதிகளவில் ஆர்வமாக உள்ளனர்.

இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடனும் கலந்து பேசவுள்ளோம். தேர்தலில் பாஜக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 3-ம் தேதி வெளியிடுவோம்’’ என்றார்.

பலவீனமான திமுக

திமுக தற்போது மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. எனவே தான் இந்த தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டி புறக்கணித்துள்ளது என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 100 நாள் ஆட்சியில் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் எங்களை மக்கள் ஆதரிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE