காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியின் வழியாக ஓடும் மஞ்சள் நீர் கால்வாயை தூர்வாருவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. கால்வாயில் ஆங்காங்கே அதிக அடைப்புகள் இருப்பதால் பெருமழை பெய்தால் கழிவுநீர் மற்றும் மழைநீர் முறையாக வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மஞ்சள் நீர் கால்வாய் என்பது காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதி வழியாக ஓடும் மழைநீர் கால்வாய் ஆகும். இந்த கால்வாய் வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் கைலாசநாதர் கோயில் பகுதி, கிருஷ்ணன் தெரு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை மற்றும் திருக்காளிமேடு பகுதி வழியாகச் சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.
இந்தக் கால்வாய் 20 அடி ஆழமும், 30 அடி அகலமும் கொண்டது. மொத்தம் 20 கி.மீ நீளம் கொண்ட இந்தக் கால்வாய் காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் மட்டும் 8 கி.மீ தூரம் ஓடுகிறது. முதலில் மழைநீர் செல்லும் கால்வாயாக மட்டுமே இந்த மஞ்சள் நீர் கால்வாய் இருந்தது. நாளடைவில் இந்த கால்வாயில் சாயப்பட்டறை கழிவுகள், அரிசி ஆலை கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என அனைத்தும் விடப்பட்டு தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில் ஓடும் இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் கோரைப் புற்கள் வளர்ந்து நீர் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டுள்ளன. மேலும் பாலித்தீன் பைகள், குப்பைகள் ஆங்காங்கே கால்வாய்க்குள் கொட்டப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த கால்வாய்க்கு அருகே உள்ள மக்கள் வசிப்பிடங்களில் துர்நாற்றம் வீசுவதுடன், அவர்களுக்கு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி?
» ‘இதுதான் மோடியின் பொருளாதார புரட்சியா?’ - உலக பட்டினி குறியீட்டை சுட்டிக்காட்டி காங்., கேள்வி
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீர் இந்த கால்வாய் வழியாகச் சென்றுதான் நத்தப்பேட்டை ஏரியை அடைகிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாவிட்டால் தண்ணீர் முறையாக வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே வேகவதி ஆறு பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையும் ஆமை வேகத்தில்தான் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த கால்வாயும் துரிதமாக தூர்வாரப்படாமல் இருப்பது திடீரென்று பெருமழை பெய்தால் மழைநீர் சரிவர வெளியேறாமல் காஞ்சிபுரம் பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆறுமுகம் கூறியது: காஞ்சிபுரம் மாநகரம் கோயில் மாநகரம். இங்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் பலர் வருகின்றனர். பட்டு நகரம் என்பதால் வணிகர்கள், பட்டுச் சேலை வாங்குபவர்களும் வருகின்றனர். இப்படிப்பட்ட ஒரு நகரத்தின் மையத்தில் ஓடும் மஞ்சள் நீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
இது முழுக்க முழுக்க மாநகராட்சியின் செயல்படாத தன்மையை காட்டுகிறது. மழைக்காலத்துக்கு முன்பாக இந்த மஞ்சள் நீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து வரும் கழிவு நீர் நத்தப்பேட்டை ஏரியில் கலந்து அருகில் உள்ள விவசாய நிலங்கள் நாசமடைகின்றன. கால்வாயை தூர்வாருவதுடன், வரும் நீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மஞ்சள் நீர் கால்வாயை சீரமைக்க ரூ.40 கோடி நிதி அரசு மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெயில் காலங்களில் குறைவான நீர் ஓடுவதற்கும், மழைக்காலங்களில் அதிக நீர் ஓடுவதற்கும் ஏற்ற வகையில் கீழ்ப்பகுதியில் சுருங்கி மேல் பகுதியில் அகன்று இருக்கும் வகையில் இந்த கால்வாயை வடிவமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கால்வாய் பணி ஏற்கெனவே பல்வேறு இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சியில் உள்ள பல்வேறு மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. மஞ்சள் நீர் கால்வாயையும் இதனுடன் சேர்த்து தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புதிதாக கால்வாய் அமைக்கும் இடங்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுள்ளன என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago