காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே கருத்து வேறுபாடு: 3 முறை நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி

By இரா.ஜெயப்பிரகாஷ்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த மே 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவுபெற்றது.

இக்கோயிலில் வடகலை பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் இடையே நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி கடந்த மே 29-ம் தேதி நடைபெற்றது. நம்மாழ்வார் அவதார நட்சத்திர தினத்தன்று அவரது சந்நிதியில் பெருமாளை வைத்து, தென்கலை பிரிவினர் பாசுரங்களைப் பாடி வழிபடுவது வழக்கம்.

இதேபோல் இந்த ஆண்டு கருடசேவை நிகழ்ச்சிக்கு முதல் நாள் நம்மாழ்வார் அவதார உற்சவத்தை முன்னிட்டு, உற்சவரை இரவு 10.30 மணிக்கு தென்கலை பிரிவினர் கொண்டு சென்று நம்மாழ்வார் சந்நிதியில் வைத்து பாசுரங்களைப் பாடினர். மறுநாள் கருடசேவை என்பதால் 12.30 மணிக்குள் நம்மாழ்வார் சந்நிதியில் இருந்து உற்சவர் புறப்பட வேண்டும் என வடகலைப் பிரிவினர் வலியுறுத்தினர். ஆனால் அந்த நேரத்தையும் தாண்டி தென்கலை பிரிவினர் பாசுரங்களைப் பாடிக்கொண்டிருந்தனர். மறுநாள் அதிகாலையில் கருடசேவை நிகழ்ச்சிக்குச் சுவாமியை அலங்காரம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறி வடகலை பிரிவினர் நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்தனர். அங்கு ஆழ்வாருக்கு சடாரி வைத்து மரியாதை செய்து உற்சவரை எடுத்துச் செல்ல முயன்றனர்.

அதிகாரிகள் தலையீடு

ஆனால், பாசுரங்களைப் பாடி முடிப்பதற்குள் உற்சவரை எடுத்துச் செல்ல தென்கலைப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு தற்காலிகமாக இப்பிரச்சினையை சரிசெய்தனர். ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மனக்கசப்பு தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 31-ம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் தங்கப் பல்லக் கில் வரதராஜ பெருமாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பெருமாள் வீதியுலா வந்தபோது, தென்கலை பிரிவினர் பாசுரங்களைப் பாடியதாகத் தெரிகிறது. கோயிலுக்குள்தான் தென்கலை பிரிவினர் பாசுரங்களைப் பாட வேண்டும் என்று வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரச்சினைக்கு காரணம்?

இதைத் தொடர்ந்து டிஎஸ்பி முகிலன் தலைமையில் பாதுகாப்புக்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். வருவாய் கோட்டாட்சியர் ராஜு, வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இருபிரிவினரிடையே உள்ள இப்பிரச்சினையை கோயிலுக்குள் சென்று இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம், இப்போது அமைதியான முறையில் சுவாமி வீதிஉலா வரட்டும் என்று அவர்கள் இரு பிரிவினரிடமும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து தென்கலை பிரிவினர் ஒரு பிரிவாகவும், வடகலை பிரிவினர் ஒரு பிரிவாகவும் பிரிந்து சுவாமியுடன் ஊர்வலத்தில் சென்றனர். இவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸாரும் உடன் சென்றனர்.

வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்றுடன் நிறைவுற்ற நிலையில், நம்மாழ்வார் சந்நிதியில் மீண்டும் உற்சவரைக் கொண்டு வந்து வைத்து பாசுரங்களை முழுமையாகப் பாடி நிறைவுசெய்ய அனுமதிக்க வேண்டும் என தென்கலை பிரிவினர் வலியுறுத்தினர். அதே நேரத்தில் தென்கலை பிரிவினர் உரிய நேரத்தில் பாசுரங்களை பாடி முடிக்காததாலும், ஆழ்வாருக்கு மரியாதை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சடாரி தட்டி விட்டப்பட்டதாலும்தான் பிரச்சினை ஏற்பட்டது. எனவே, இப்பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடகலை பிரிவினர் வலியுறுத்தினர்.

வடகலை - தென்கலை பிரிவினரிடையேயான பிரச்சினைக் குறித்து கோயில் செயல் அலுவலர் விஜயனிடம் கேட்டபோது, ‘‘இரு பிரிவினரின் பிரச்சினையை தீர்க்க 3 முறை சமரசு பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடந்து கொண்டிருந்ததால் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் இரு தரப்பினரிடமும் இது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் நல்லதொரு முடிவு தெரியவரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்