கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு பைக்குகளை வாங்கிக் கொடுக்காதீர்கள் என பைக் ரேஸின்போது நடந்த விபத்தில் மகன்களை இழந்த பெற்றோர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் முக்கிய சாலைகளில் அடிக்கடி பைக் ரேஸ்கள் நடைபெற்று வருகின்றன. குறிப் பாக அண்ணாசாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுகிறார்கள். இந்த ரேஸ்களின்போது அடிக்கடி விபத்துகள் நடந்து உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.
சென்னை அண்ணா சாலை யில் கடந்த 23-ம் தேதி மாலை பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில், தேனாம்பேட்டை பர்வா நகரைச் சேர்ந்த பெ.விக்ரம் (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் பின்னால் அமர்ந்து பயணித்த புதுவண்ணாரப்பேட்டை கீரைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த த.யோகேஸ்வரன் (17) என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.
2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களின் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தேனாம்பேட்டையில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பின் 3-வது தளத்தில் சிறிய வீடு ஒன்றில் விக்ரமின் பெற்றோர் வசிக்கின்றனர். ஏழ்மையான பின்னணியைக் கொண்ட விக்ரமின் குடும்பத்தினர், தங்கள் மகனை இழந்த துக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவித்து வருகின்றனர்.
விக்ரமுக்கு சமீபத்தில் வாங்கிய புத்தாடை மற்றும் காலணியை வைத்துக்கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தார் விக்ரமின் தாயார் லட்சுமி. தன் மகனுக்கு ஏற்பட்ட நிலை குறித்து பேசிய அவர், “என் கணவரின் பூர்வீகம் வந்தவாசி. பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் குடியேறி விட்டோம். கணவர் வேன் ஓட்டி வருகிறார். மூத்த மகள் மீனாட்சி, 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஒரே மகன் என்பதால் விக்ரம் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்போம். 2 மாதங்களுக்கு முன்னர் பைக் வேண்டும் என அடம் பிடித்தான். கல்லூரி முடித்த பிறகு வாங்கித் தருகிறோம் என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இறுதியில் எனது நகையை ரூ.1 லட்சத்துக்கு அடகு வைத்தோம். அதில் ரூ.60 ஆயிரத்தை கல்விக் கட்டணமாக செலுத்தி மீதமுள்ள பணத்தை முன்பணமாகக் கொடுத்து தவணை முறையில் பைக் வாங்கிக் கொடுத்தோம்.
விக்ரம் வீட்டில் சாதுவாகத்தான் இருப்பான். அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன்தான் இருப்பான். கடந்த சனிக்கிழமையும் என்னிடம் சொல்லிவிட்டுதான் போனான். வீட்டுக்கு விரைவாக வந்து விடு என்றேன்.
ஆனால், அவனை பிறகு சடலமாகத்தான் பார்த்தோம். அவனைப்பற்றி நாங்கள் கண்ட கனவெல்லாம் நொறுங்கிப் போய்விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கல்லூரியில் படிக்கும் பருவத்தில் பைக் வாங்கிக் கொடுக்காதீர்கள். பொறுப்பு வந்த பின்னர் வாங்கிக் கொடுங்கள். பைக் ரேஸில் மகனை இழக்கும் கடைசி தாயாக நானே இருக்கட்டும்” என்றார்.
யோகேஸ்வரனின் தந்தை தங்கமணி கூறும்போது, “மகன் பைக் வேண்டும் என பிடிவாதமாக கேட்டான். நான் வாங்கித்தரவில்லை. அவனுக்கு பைக் ஓட்டவும் தெரியாது.
இறுதியில் வேறு ஒருவரின் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான். விபத்தில் சிக்கிய உடனே உடனடி சிகிச்சை அளித்திருந்தால் அவன் பிழைத்திருப்பான்.
ஆனால், இப்போது எல்லாம் முடிந்து விட்டது. யோகத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக யோகேஸ்வரன் என்று பெயர் சூட்டினேன். ஆனால், அதற்கு எதிர்மாறாக அமைந்து விட்டது” என்று கண்கலங்கினார்.
பெற்றோர் மீது நடவடிக்கை
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் கூறும்போது, “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்று பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட சிலர் பைக் ஓட்டி வருகின்றனர். இதை பெற்றோர்கள் கண்டிப்பதில்லை. இப்படிப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 40 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்க கூடாது. நெரிசலான பகுதிகளில் அதை விட குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்குவதே பாதுகாப்பானது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago