சென்னை ‘ரெட் அலர்ட்’ விளக்கம் முதல் ஆந்திர கனமழை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் எங்கெல்லாம் மிக கனமழை வாய்ப்பு? - தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கக்கூடும். இதனால்,
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வியாழக்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ரெட் அலர்ட்’ ஏன்? - பாலச்சந்திரன் விளக்கம்: சென்னைக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ குறித்து புதன்கிழமை விளக்கம் அளித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. காலை மற்றும் பகல் பொழுதுகளுக்கும் வானிலையில் வேறுபாடு இருக்கும். வியாழக்கிழமை காலை கரைக்கு அருகில் வருகிற போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்து வரும் மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், ரெட் அலர்ட் என்பது 2 மணி முதல் 4 மணிக்கு ஆனது இல்லை. அதனால்தான், வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரம், அடுத்து வருகிற 48 மணி நேரம் என்ற வகையில் கூறுகிறது. அதாவது காலை 8.30 மணி முதல் அடுத்த நாள் காலை 8.30 மணிக்கானது, கால அளவாக அதை புரிந்துகொள்ள வேண்டும். காரணம், இந்த வானிலை நிகழ்வு மொத்தமாக கலைந்துவிடவில்லை. இன்னும் கடலில் இருப்பதால், கரையை நோக்கி வரும்போது மழைக்கு வாய்ப்பு உள்ளது, எனவேதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது. எச்சரிக்கையாக இருப்பதற்காகவே ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விளக்கம்: தென் சென்னை பகுதிகளான கிண்டி வேளச்சேரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்தக் குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்சம் கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்தப் பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. வரக்கூடிய காலக்கட்டத்தில், அதையும் முடித்துவிடவோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு உணவு இலவசம்: “வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், புதன்கிழமையும் வியாழக்கிழமையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ட்ரோன்கள்’ - சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில், மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 ட்ரோன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்களின் சோதனை முன்னோட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை ஆய்வு செய்தார். இந்த ட்ரோன்களில் பால், பிரட் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இந்த ட்ரோன்கள் 40 மீ. உயரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: 36 முகாம்களில் 1,360 பேர் தங்கவைப்பு: ‘சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1,360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதி கனமழை: மதுரை ஆதீனம் கருத்து: “தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழை பொழிவதற்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம்” என்று மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.

3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 3428 கனஅடியாக அதிகரித்த நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 2680 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தள வீடியோ பதிவுக்கு ரெஸ்பான்ஸ்: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது எனவும், நடவடிக்கை எடுக்க கோரியும் குடியிருப்பு வாசி ஒருவர் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு துணை முதல்வரை டேக் செய்தார். அவரது கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆந்திராவில் கனமழை தீவிரம்: வானிலை மாற்றம் காரணமாக, புதன்கிழமை பகல் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைப் பொழிவு வெகுவாக குறைந்தது. அதேநேரத்தில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதாவது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெல்லூர் மற்றும் திருப்பதி பகுதிகளின் சில இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதையடுத்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்