வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அதிதீவிரம்: ஒரே நாள் மழையில் மிதக்கிறது சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நாளிலேயே தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, தமிழகத்தின் 22 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: இந்திய பகுதிகளில் 15-ம் தேதி (நேற்று) தென்மேற்கு பருவமழை விலகியநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (16-ம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம், புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (அக்.16, 17) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 18 முதல் 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று (அக்.16) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். ஒருநாள்மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தலைநகர் சென்னை மிதக்க தொடங்கிஉள்ளது. சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 7 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்