சென்னை: சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய கனமழை விடாது பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு:
சென்னையில் விடாது பெய்யும் கனமழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்றிரவு விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் காலையில் மீண்டும் மழை தொடங்கியது. அடையாறு, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் 8 மரங்கள் சாய்ந்தன, அவை அனைத்தும் உடனே அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன.
உதயநிதி ஆய்வு: சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக இருக்கிறது.மொத்தமாக 931 மையங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள், என்று அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: சென்னையில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை JCB இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பேசின் மேம்பாலத்திலிருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், புளியந்தோப்பு, ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஆய்வு செய்தார்.
» திருவள்ளூரில் தொடர் மழை: புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழை நீர் வரத்து
» ‘பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளிப்பு’ - அரசு மீது இபிஎஸ் சரமாரி சாடல்
முன்களப் பணியாளர்களுக்கு ‘தேநீர்’ - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை புளியந்தோப்புப் பகுதியில் மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்களைப் பாராட்டினார். அவர்களை அருகிலிருந்த தேநீர் கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு டீ-பிஸ்கட் வாங்கித்தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்தார். தமிழக முதல்வரின் இந்த செயலை முன்களப் பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாகப் பாராட்டினார்கள்.
நானும் துணை நிற்பேன்: இதுகுறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னையில் கனமழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை, சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை ஆகிய 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
தாம்பரத்தில் கே.என்.நேரு ஆய்வு: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று (அக்.15) காலை ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உடனடியாக தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
4 மாடுகள் பலி: தாம்பரம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அப்பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததில் ராணி மற்றும் காளிதாஸ் ஆகியோருக்கு சொந்தமான 4 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
ஹெல்ப்லைன் எண்கள் வெளியீடு: சென்னையில் கனமழை பாதிப்பு தொடர்பாக தொடர்புகொள்ள 15 மண்டலங்களுக்கும் அவசர கால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து விதமான முறையீடுகளுக்கும் 1913 என்ற டோல்-ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம். சென்னை காவல்துறையை 100 என்ற அவசர எண்ணிலும், பெண்களுக்கான உதவி எண் 1091/181-லும் தொடர்பு கொள்ளலாம். மின்சார வாரியத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பாம்புகளை பிடிக்க வேண்டுமானால் வனத்துறையின் 044-22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது: தென்மேற்கு பருவமழை இன்று (அக்.15) இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் துவங்கியுள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் நாளை (அக்.16) 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்.16-ம் தேதியன்று வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த குடியிருப்புகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: அக்.1 முதல் இன்று (அக்.15) வரையிலான காலக்கட்டத்தில் வடகிழக்கு பருவமழை 12 செ.மீட்டர் பதிவாகியுள்ளது.இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 7 செ.மீட்டர். இது இயல்பைவிட 84 சதவீதம் அதிகம், என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
215 புகார்களுக்கு தீர்வு : கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொளத்தூரில் 9 செ.மீ. மழைப்பதிவு: தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் அக்.14 வரை 10.52 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமான அளவைவிட 68 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சராசரியாக 2.241 செ.மீ., மழையும், சென்னையில் சராசரியாக 6.5 செ.மீ., மழையும், அதிகபட்ச மழைப்பொழிவுயாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் 13.4 செ.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீட்டரும், சென்னை மாவட்டத்தில் மண்டலம் 8 மலர் காலனியில் 9 செ.மீட்டரும், மண்டலம் 6 கொளத்தூரில் 9 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.
இபிஎஸ் வலியுறுத்தல்: சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பார்க்க > அதி கனமழையில் தத்தளிக்கும் சென்னை - புகைப்படத் தொகுப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago