“சென்னை மட்டுமே தமிழகம் இல்லை; உள் மாவட்டங்களிலும் கவனம் தேவை” - இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது. தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஸ்டானின் திமுக அரசு ஈடுபட வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும்; சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை செய்துள்ளனர்.

அதே போல், கடந்த ஓரிரு நாட்களாக கோவை, திருப்பூர், புதுகோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மழையினால் பல சாலைகள் வெள்ள நீரால் மூழ்கியும், மண் சரிவு ஏற்பட்டும் பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது என்றும்; மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன என்றும்; சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகங்களும், மாவட்ட அமைச்சர்களும் செயல்பாடற்றுக் கிடப்பது கண்கூடாகத் தெரிகிறது.

நேற்று (அக்.13) முதல், சென்னை மாநகராட்சியில் உதயநிதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை வீடியோக்களையும், படங்களையும், செய்திகளையும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, வாரிசு அடிப்படையில் துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் திமுக அரசு குறியாக உள்ளது.

இதனால், கன மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் இன்று காலைவரை எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், எனது தலைமையிலான அதிமுக அரசிலும், இயற்கை பேரிடர் ஏற்பட்ட காலங்களில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும், மாவட்ட அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல், களத்தில் நேரடியாக இறங்கி, இதய சுத்தியோடு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை மாநகர மக்கள் ஸ்டாலினின் திமுக அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன. தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்துக்குரியதாகும்.

தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டானின் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்