ஐடி ஊழியர்களுக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முதல் வதந்திகள் அலர்ட் வரை - முதல்வர் ஆலோசனைக் கூட்ட ஹைலைட்ஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அக்.15 முதல் அக்.18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) தலைமைச் செயலகத்தில், அக்.15 முதல் அக்.17 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அக்.13 நாளிட்ட அறிவிக்கையில், தமிழகத்தின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் அக்.14 முதல் அக். 17 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை மாதிரிகளின் (forecast models) அடிப்படையில் தமிழக்த்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது. அக்.14 முதல் அக்.17 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது.

இந்த கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் , பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன என்றும், மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 46 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்புப் பணிகளுக்காக 59 JCB-க்கள், 272 மர அறுப்பான்கள், 176 நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்டத்தில், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 33 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 102 JCB-க்கள், 116 படகுகள், 83 ஜெனரேட்டர்கள், 116 நீர் இறைப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 290 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் , தனது மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 21 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 276 JCB-க்கள், 10 படகுகள், 30 ஜெனரேட்டர்கள், 250 நீர் இறைப்பான்கள், 43 மர அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 62 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

பின்னர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 64 பல்துறை மண்டலக் குழுக்கள், 48 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், 660 நிவாரண முகாம்களும், 121 JCB-க்கள், 317 படகுகள், 81 ஜெனரேட்டர்கள், 206 நீர் இறைப்பான்கள், 154 மர அறுப்பான்கள், 31 தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த தமிழக முதல்வர் , கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் அறிவுரைகள் வழங்கினார்.

> அக்.15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

> அக்.15 முதல் அக்.18 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

> தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

> வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

> மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

> பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

> உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

> தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

> முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.

> நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

> ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

> மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

> அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

> மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

> முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் - கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

> மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

> பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

> மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

> தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.

> பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கிய அறிவுரைகள்:

> விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

> தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

> முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

> கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.

> அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

> கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

> பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்