குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த அம்மன்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

முத்தாரம்மன் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா கடந்த 3-ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கடந்த 10 நாட்களாக வீதிகள்தோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி, அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.

தசரா கலைநிகழ்ச்சிகள் தென்மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக களை கட்டின. மேலும், தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் குலசேகரன்பட்டினத்துக்கு வரத் தொடங்கினர். நேற்று காலை முதல் உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டன. வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

முத்தாரம்மன் கோயிலில் நேற்றுகாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. நள்ளிரவு12 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் முன்பாக எழுந்தருளிய அம்மன், பல்வேறு வேடங்களில் வந்த மகிஷாசூரனை வதம் செய்தார். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர 'தாயே முத்தாரம்மா', 'ஓம் காளி, ஜெய்காளி', 'வெற்றி அம்மனுக்கே' என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தசரா குழுவினர் விடிய விடிய கலைநிகழ்ச்சிகளை நடத்தியதால், குலசேகரன்பட்டினம் களைக்கட்டியது.

விழா இன்று நிறைவு: இன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன், பக்தர்கள் காப்பை அவிழ்த்து தங்கள் வேடங்களை களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி, எஸ்,பி. ஆல்பர்ட் ஜான் சரவணன் தலைமையில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் ம.அன்புமணி, உதவி ஆணையர் க.செல்வி, அறங்காவலர் குழுதலைவர் வே.கண்ணன், கோயில்செயல் அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்