மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு வழக்கு

கோயில் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங் கலம் அருகேயுள்ள சிவரக் கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியை கட்டுவதற்காக அருகிலுள்ள விநாயகர் கோயிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி கடந்த ஜூன் மாதம் மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் புகார் மனு அளித்தார்.

மறுநாள் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப் படையில் இதுபற்றி விசாரணை நடத்துமாறு இந்து சமய அறநிலையத் துறை உத்தர விட்டது. அதன்பேரில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சுரேந்திரன், உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் குழு ஜூன் 23-ம் தேதி சிவரக்கோட்டை சென்று விசாரணை நடத்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணை யருக்கு அறிக்கை அளித்தனர்.

மேலும் சர்ச்சைக்குரிய இடம் முள்காடுகளாக இருந்ததால், அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வருவாய்த் துறை மூலம் நில அளவை செய்ய முடிவு செய்தனர். இதற்காக ஜூன் 25-ம் தேதி அறநிலையத் துறை இணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் கருணாநிதி தலைமையிலான குழுவினர் மீண்டும் அங்கு சென்றனர். பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்திலிருந்து முள்செடிகளை அகற்றினர். பின்னர் திருமங்கலம் தாலுகா வருவாய் அதிகாரிகள், நில அளவையர்கள் மூலம் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை அளவிட்டு, 4 எல்லை கற்களை நட்டனர். மேலும் அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என அறிவிப்பு பலகையும் அமைத்தனர்.

இந்நிலையில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தொடர்பாக மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்வது பற்றி கடந்த 3 நாட்களாக மதுரை மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், சரக டிஐஜி ஆனந்தகுமார் சோமானி, மதுரை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் மு.க.அழகிரி மீது நில அபகரிப்பு மற்றும் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE