சட்டமன்ற கூண்டில் ஏற்றப்பட்ட அந்தத் தருணம்... - முரசொலி செல்வம் ‘சம்பவங்கள்’

By செய்திப்பிரிவு

‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 84. அவர் குறித்த வாழ்க்கைக் குறிப்புகள்...

கருணாநிதி வைத்த பெயர்: முரசொலி செல்வம் 1941-ம் ஆண்டு ஏப்ரலில் பிறந்தவர். இவருக்கு, நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தின் நினைவாக, பன்னீர்செல்வம் என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயர் சூட்டினார். நாளடைவில் இந்த பன்னீர்செல்வம் என்ற பெயர் மறைந்து, முரசொலி செல்வம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. கருணாநிதியின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர் என்ற குடும்ப உறவின் பின்னணியையும் தாண்டி திமுகவின் அறிவார்ந்த சொத்தாகத் திகழ்ந்தவர் முரசொலி செல்வம்.

உரிமை மீறல் பிரச்சினை: அந்த சமயத்தில், முரசொலியில் வரும் பெட்டிச் செய்திகள் அதிகம் கவனம் பெற்றது. அதை முரசொலி மாறன்தான் எழுதி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவற்றை முரசொலி செல்வம் தொடர்ந்து எழுதினார். இதுபோன்ற செய்திகள், திமுகவினர் மட்டுமின்றி பொதுவான வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்தது. கடந்த 1989-ம் ஆண்டு முதல் செல்வம் முரசொலி நாளேட்டைக் கவனித்து வந்தார். கடந்த 1991-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அப்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு தொடர்பாக பேரவையில் பேசிய செய்தி முரசொலியில் பிரசுரிக்கப்பட்டு, வெளியூர்களுக்குச் சென்ற முரசொலி நாளேட்டுகளில் வெளியானது.

சட்மன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார் - இதையடுத்து முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உத்தரவின்படி சட்டமன்றத்தில் ஆஜரானார் முரசொலி செல்வம். அவரை விசாரிப்பதற்காகவே சட்டமன்றத்தில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, முரசொலி செல்வத்தின் துணிச்சலைப் பாராட்டி ‘கூண்டு கண்டேன்- குதூகலம் கொண்டேன்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி.

‘ஜனநாயகப் படுகொலை’ - கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு இருட்டியப் பிறகு, வெளியானது. அந்த சமயத்தில் முரசொலி மாறன் டெல்லியிலிருந்து அங்குள்ள சூழல்களை கவனித்து வந்தார். முரசொலி அலுவலகத்தின் ஆசிரியர் குழு, செய்தியை எந்த முறையில் வெளியிடுவது, என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், முரசொலி அலுவலகத்துக்கு வந்த முரசொலி செல்வம், அடுத்தநாள் முரசொலி முதன்மைச் செய்திக்கான தலைப்பு மற்றும் அதை ஒட்டிய பெட்டிச் செய்திகள் என அனைத்தையும் எழுதி கொடுத்தார். அடுத்த நாள் முரசொலி நாளேட்டின் தலைப்புச் செய்திக்கு முரசொலி செல்வம் வைத்த தலைப்பு ‘ஜனநாயகப் படுகொலை’ .

அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 மே 22-ம் தேதியன்று நள்ளிரவில், முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. வாகனங்கள், ஆவணங்கள், அச்சுக் காகிதங்கள், அச்சகம் எல்லாம் எரிந்து கருகிய நிலையில், மறுநாளே முரசொலி நாளிதழ் அச்சிடப்பட்டது. அப்போது முரசொலி செல்வம் வைத்த தலைப்பு ‘Murasoli will take it’.

‘முரசொலி - சில நினைவுகள்’ - முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். கருணாநிதியின் எழுத்தில் பொதிந்திருக்கும் எள்ளல் நடையை உரிமையுடன் பெற்றுக்கொண்டு, தன் பாணியிலான கட்டுரைகளை வழங்கியவர் அவர். அக்டோபர் 8-ம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பதிலளித்து கட்டுரை எழுதியிருந்தார். 80 ஆண்டுகளைக் கடந்த முரசொலி தனது பயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகளை, தாக்குதல்களை, கைது நடவடிக்கைகளை தொகுத்து ‘முரசொலி-சில நினைவுகள்’ என எழுதினார். இதழியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அது மிகச் சிறந்த கையேடு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்