திருவாரூர்: தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பிறகு சம்பளம் கொடுக்க முடியாத நிலை தமிழக அரசுக்கு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட பொதுச் செயலாளர் வி.கே.செல்வம், பாஜக தமிழக செயற்குழு உறுப்பினர் ராகவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியது: ''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், குறிப்பிடும்படியான வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீர் வெற்றியை ஏற்றுக் கொள்கின்ற காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஹரியானாவில் வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறுவது வேடிக்கையானது. இரு மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணம், ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை பின் நாட்களில் எடுத்து விடுவோம் எனப் பேசியதுதான்.
ஜவஹர்லால் நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை இட ஒதுக்கீட்டு குறித்த பார்வை ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகவே, காங்கிரசை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து வர இருக்கின்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும். தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை பல ஆண்டுகளாக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நிகழாண்டில் பங்கேற்றமைக்காக அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தளவாய் சுந்தரத்தின் செயலை ஏற்கவில்லை என்றாலும், அந்த மாவட்ட மக்கள் இதனை சரி என்று ஏற்றுக்கொள்வார்கள்.
» மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
» தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைத்து வழங்கப்படுவதாக கூறுவது வேடிக்கையானது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் 50 சதவீதம் மாநில அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீதம் மத்திய அரசுக்கும் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் 50 சதவீத பங்குத் தொகையில் தான் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் 2004 - 2014-ம் ஆண்டு வரை 50 சதவீதம் மத்திய அரசின் பங்கில் 32 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டன. அது தற்போதைய ஆட்சியில் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்கள் அதிக வரி வருவாயை தருகின்றன. அதற்காக அந்த வரிவாய் வருவாய் முழுவதையும் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கே செலவு செய்ய இயலாது. திருவாரூர், அரியலூர் போன்ற குறைந்த வரி வருவாய் கொடுக்கின்ற மாவட்டங்களுக்கும் சாலை வசதி போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
அதுபோலத்தான் மத்திய அரசுக்கு இந்தியா முழுமைக்குமான மாநிலங்களை முன்னேற்ற வேண்டிய கடமை உள்ளது. இத்தகைய கேள்வியை திருச்சி சிவா மாநிலங்களவையில் கேட்டபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து விரிவாக பதிலளித்தார். அந்த பதிலை ஏற்றுக்கொண்டு திருச்சி சிவா அமர்ந்துவிட்டார். கடந்த மார்ச் 2023-ல் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய கல்விக் கொள்கையை முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சமக்ர சிக் ஷா அபியான் என்ற திட்டத்தை ஏற்கமாட்டோம் என தமிழக அரசு கூறி வருகிறது. அந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்ட மறுநாளே தமிழகத்துக்கு ரூ. 571 கோடி நிதி ஒதுக்கீடு கிடைக்கும். தமிழக அரசை பொறுத்தவரை ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்க முடியாத சூழல் உள்ளது. இதே நிலை நீடித்தால் அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஆறு மாதத்துக்குப் பிறகு சம்பளம் கிடைக்காத நிலை உருவாகும். அதற்குக் காரணம், தமிழக அரசின் பட்ஜெட்டில் மூலதன செலவுக்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.
டாஸ்மாக் மற்றும் கோயில்கள் மூலம் மக்களை இந்த அரசு சுரண்டி வருகிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானம் ரூ.48,700 கோடி ஆகும். வரும் நிதியாண்டில் இதனை ரூ.54 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் இளம் விதவைகள் அதிகரித்துள்ளதாக திமுக எம்பி-யான கனிமொழியே கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் தவறில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவதில் தஞ்சை செங்கிப்பட்டியிலா, மதுரையிலா என காலம் தாழ்த்தியது தமிழக அரசுதான். அதேபோல ரூ.85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் சென்னை, கும்பகோணம் இடையிலான சாலை அமைப்பதற்கு இடம் கையகப்படுத்தி கொடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிரதமர் கூட்டத்துக்கே அனுமதி மறுக்கின்ற அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர். இது பஞ்சாயத்து அலுவலகத்தின் காவலாளி, பஞ்சாயத்து தலைவரை அலுவலகத்துக்குள் அனுமதிக்க முடியாது என கூறுவதற்கு சமமாகும். அத்தகைய ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இது போன்ற அணுகுமுறைகளை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago