திருச்செந்தூர் கோயில் திருப்பணிகள் 2025 ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும்: அமைச்சர் சேகர்பாபு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். அதற்கு முன்னதாக, ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளை வரும் 14ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் நடைபெற்று பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் திருப்பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (புதன்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் நிற்காமல் விரைவாக தரிசனம் மேற்கொள்ளும் வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திருக்கோயில் வளாகத்தில் ரூ.48.36 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப் பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் 14ம் தேதி தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

மேலும் ரூ.5.81 கோடி மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, வேத பாடசாலை மற்றும் கருணை இல்லம் கட்டும் பணி, புதிதாக அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீருற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய அழகிய பூங்கா உள்ளிட்ட புனரமைக்கும் பணி ஆகிய புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். பக்தர்கள் தங்கும் புதிய விடுதியானது 540 நபர்கள் தங்கும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் 20 சிறப்பு அறைகள், 100 தங்கும் அறைகள் மற்றும் உணவகத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. திருக்கோயிலில் முதல் கட்டமாக நடைபெற்று வரும் 21 பணிகளையும், இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் 24 பணிகளையும் தற்போது ஆய்வு செய்தோம்.

இந்த பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்து குடமுழுக்கு நடத்திட திட்டமிட்டுள்ளோம். தமிழக முதல்வர் தலைமையிலான இந்த அரசு ஆட்சி அமைந்த பிறகு சுமார் ரூ.1,040 கோடி அளவிற்கு முருகன் கோயில்களில் திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், வடபழநி ஆண்டவர் திருக்கோயில் மற்றும் சிறுவாபுரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுக்கு நடத்தப்பட்டன. திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழநி, திருச்செந்தூர், திருத்தணி, வயலூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள முருகன் திருக்கோயில்கள் பெருந்திட்ட வரைவில் (மாஸ்டர் பிளான்) எடுத்துக்கொள்ளப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் அனைத்துமே அடுத்த ஆண்டு டிசம்பர் அல்லது அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடித்திட திட்டமிடப் பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா தொடங்குவதற்கு முன்பாக யாத்திரி நிவாஸ் என்று அழைக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். தமிழக முதல்வர் திறந்து வைத்த அடுத்த நாளில் இருந்து இதற்கான முன்பதிவு தொடங்கப் படும். இதனை நிர்வகிக்கும் பணிகளை திருக்கோயில் நிர்வாகம் அல்லது சுற்றுலாத் துறையின் மூலமாக மேற்கொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இந்த தங்கும் விடுதிக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம் தனியார் விடுதியை விட குறைவாகத்தான் இருக்கும்.

இது குறித்து கலந்தாலோசித்து பக்தர்களுக்கு அதிக சுமை இல்லாமல், அதே நேரத்தில் நல்ல முறையில் பராமரித்திடும் வகையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும். திருச்செந்தூர் கடற்கரையில் கற்கள் கொட்டப்படுகின்ற பணி பக்தர்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகின்ற பணியாகும். அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து தான் இந்த பணியை செய்து வருகிறோம். திருச்செந்தூர் கடற்கரையை பொறுத்தளவில் கடல் அரிப்பு ஒருபுறம் என்றாலும், அவ்வப்போது கடல் உள்வாங்குகிற சூழ்நிலையும் இருக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து பக்தர்களுடைய பாதுகாப்பினை கருதி, கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும், இயற்கை சீற்றங்கள் வருகிறபோது பக்தர்களுடைய பாதுகாப்பிற்காகவும் சுமார் ரூ.20 கோடி செலவில் கடலில் கற்கள் கொட்டுகின்ற பணி நடந்து வருகிறது.

இதில் சுமார் 50 சதவீதத்துக்கு மேலான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்புதான் திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பாக ஒரு சட்ட திட்டத்தை கொண்டு வந்தோம். இதற்கு முன்பு, புகார்தாரராக ஆணையர் தான் இருந்தார். புகார்தாரர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம். எனவே, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது பல குற்ற வழக்குகள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராஜகோபுரத்தின் கலசங்களுக்கு தங்க மூலாம் பூசும் பணிக்கு முயற்சி மேற்கொள்ளப்படும். கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் குறித்து அனைத்து அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் 10 நாட்களுக்குள் நடத்தவுள்ளோம்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

இந்த ஆய்வின் போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கூடுதல் ஆணையர் சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, இந்து சமய அறநிலையத் துறை தலைமைப் பொறியாளர் பெரியசாமி, மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்