அதிமுக அமைப்பு செயலர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் ஏன்? - முழு பின்னணி

By அ.அருள்தாசன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலர் மற்றும் அதிமுக அமைப்பு செயலர் பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கப்பட்டுள்ளது உள்ளூரில் மட்டுமின்றி தமிழக அளவிலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் தளவாய் சுந்தரம் முக்கிய ஆளுமை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாத நிலையில் தளவாய் சுந்தரத்துக்கு தமிழக அரசின் டில்லி பிரதிநிதி என்ற பொறுப்பை பழனிசாமி வழங்கி அழகு பார்த்திருந்தார்.

தென்மாவட்டங்களில் பழனிசாமி பங்கேற்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தளவாய் சுந்தரம் ஆஜராகிவிடுவார். இந்நிலையில்தான் அவரை மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்தும், அதிமுக அமைப்பு செயலர் பொறுப்பிலிருந்தும் கட்சி தலைமை நீக்கியிருக்கிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்ததே முக்கியமான காரணமாக இருப்பதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டத்தில் 2 இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத்தில் ஈசாந்திமங்கலத்தில் நடைப்பெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினரான தளவாய் சுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைத்திருந்தார்.

பாஜகவுடன் கூட்டணியில்லை என அதிமுக தலைமை தொடர்ந்து தெரிவித்துவரும் நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தது அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. 2011 தேர்தலின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் போட்டியிடுவதற்கு கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. ஏற்கெனவே இருமுறை கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டிருந்தார். கட்சியில் பல்வேறு பின்னடைவுகளையும் அவர் சந்தித்துள்ளார். தற்போது அவரது நீக்கமும் அவ்வாறானதுதான்.

தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்திருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்திருக்கிறார். அப்போது கட்சி தலைமை எதையும் தெரிவிக்கவில்லை. இப்போது நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பச்சைமால், எஸ்.ஏ.அசோகன் தலைமையிலும் இரு கோஷ்டிகளாக அதிமுக செயல்பட்டு வருவது கட்சி தலைமைக்கு நெருடலாகவே இருந்து வருகிறது. தளவாய் சுந்தரம் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த விவகாரத்தை அவரது எதிர் கோஷ்டியினரே சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையாக்கியுள்ளனர். அதிமுக கோஷ்டி பூசலும் தளவாய் சுந்தரம் நீக்கத்துக்கு ஒருகாரணமாக சொல்லப்படுகிறது.

மேலும், கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகளை பெறும் நோக்கத்தில் அச்சமூகத்தை சேர்ந்த பசலியான் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்த தளவாய் சுந்தரம் பரிந்துரை செய்திருந்தார். அவரது பரிந்துரையை ஏற்று பசலியான் நிறுத்தப்பட்டார். ஆனால், தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தளவாய் சுந்தரத்தின் அரசியல் கணக்கு தோல்வி அடைந்துள்ளதாக கட்சி தலைமைக்கு எதிர் தரப்பினர் எடுத்துக் கூறியிருந்தனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாஜகவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் வகையில்தான் பழனிசாமி தனக்கு நெருக்கமானவரையே கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி வைத்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்