“கார் பந்தயத்துக்கு காட்டிய அக்கறை விமான சாகச நிகழ்ச்சிக்கு காட்டப்படவில்லை”  - தமிழக பாஜக சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: “உலக சாதனை படைத்த சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு போதிய அக்கறை காட்டாதது ஏன்? தனியாரின் வருமானத்துக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் விளம்பர மோகத்துக்காகவும் நடத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு காட்டிய முழு அக்கறை ஏன் இந்நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை? என்பதே மக்களின் கேள்வி,” என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உலக சாதனை நிகழ்ச்சியாக சென்னை மெரினாவில் நடந்த விமானப்படையின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள்கள் பங்கு கொள்வார்கள். மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல உதவிகளையும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யுங்கள் என ஏற்கனவே மத்திய அரசு தெளிவாக அறிவுறுத்தியும், அதற்கான முறையான ஏற்பாடுகளை, மக்கள் நலத்தை பேணிக் காக்கும் வகையில் தண்ணீர்,உணவு போக்குவரத்து, பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் மிகவும் அஜாக்கிரதையாக தமிழக அரசு செயல்பட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு மிகப்பெரிய உதாரணமாய் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் தன்னுடைய சொந்த நிறுவனத்தின் வருமானத்துக்காக, சுய லாபத்துக்காக சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்திய பொழுது, தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, தலைமைச் செயலாளர் முதல் தாசில்தார் வரை நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றும் வகையில் போர்க்கால அடிப்படையில அனைத்து வசதிகளையும், மூன்று மாதம் திட்டமிட்டு, பொதுமக்கள் ஏழை நோயாளிகள் பயன்படுத்தும் சாலைகளில் பல நாட்கள் போக்குவரத்தை தடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, அனைத்து வசதிகளையும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் டிக்கெட்டுகளை விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு செய்து கொடுத்தனர்.

ஆனால், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து கடைக்கோடி கிராமங்களில் இருந்து வந்த ஏழை நடுத்தர மக்கள் குடும்பத்தினர் குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் இலவசமாக பங்கு கொண்டு கண்டுகளித்த, விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக தலைமைச் செயலாளர் தமிழக அரசின் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைத்து திட்டமிடாதது ஏன்? கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் முதல் தற்போதைய விமான சாகச நிகழ்ச்சி வரை தமிழக அரசின் உள்துறையும், பேரிடர் மேலாண்மை நிர்வாகமும், தங்களுடைய கடமையை உரிய முறையில் செய்யத் தவறியதை தமிழக அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது.

பல நூறு கோடி செலவு செய்து கொண்டாடி மகிழும் கார்ப்பரேட் முதலாளிகளின் நிகழ்ச்சிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும், முதலாளி வர்க்கத்துக்கு பயன்படுத்தும் திமுக அரசு ,ஏழை மக்கள் கண்டு களிக்கும் விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மக்களுடைய, தேவைகளை உரிமைகளை, பேணி பாதுகாக்கும் வகையில் செயல்படாமல் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் குடிநீர் உணவுக்காக தத்தளிக்கும் வகையில் கூட்டத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டது நியாயமா?

கூட்ட நெரிசலில், நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் முடியாமல் பாதிக்கப்பட்ட மக்களை, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சில நல்ல இளைஞர்கள் கவனமாக செயல்பட்டு தாங்களாகவே பொறுப்புள்ள மக்கள் சேவை அதிகாரிகளாக மாறி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கு அரணாக செயல்பட்டதால், இறைவன் அருளால் கூட்ட நெரிசலின் காரணமாக, ஏற்படவிருந்த மிகப்பெரிய மனித உயிர் விபத்து தவிர்க்கப்பட்டு விட்டது.

மேலும் தமிழக அரசு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில், தென்னக ரயில்வேயில் சென்னை மின்சார ரயில் நிர்வாகிகளுக்கு சரியான முறையில் அறிவுறுத்தல் வழங்கி பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவில்லை. இதனால் கூடுதல் ரயில்கள், பேருந்துகள் காலையில் இருந்து இயக்கப்படாததால்
நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான மக்கள், நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் பாதி வழியில் திரும்பினர். நிகழ்ச்சி முடிந்து சென்ற மக்களும் போக்குவரத்து குறைபாடுகளால் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.

விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்புஅளித்ததாகவும், தமிழக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுடன் ஒரே ஒரு முறை ஆலோசனை பின்னர் துறை அளவில் பல முறையும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என, தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை தானே ஒப்புக் கொள்ளும் வகையில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒத்துழைப்பு என்பது வேறு, ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது என்பது வேறு என்பதை அமைச்சர் மா சுப்பிரமணியன் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பெயரளவுக்கு கூட்டங்கள் நடத்தியது போல், மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டது போல் விமானப்படை நிகழ்ச்சியிலும் அதே முறையை தமிழக அதிகாரிகள் கடைபிடித்துள்ளனர். 15 லட்சம் பேர் பங்கு கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை குழு தலைவர், உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், போக்குவரத்து கழகங்களின் செயலாளர்கள், என அனைவரிடமும் பல கட்ட ஆலோசனை நடந்திருக்க வேண்டும்.

உலக சாதனை படைத்த சென்னை மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு போதிய அக்கறை காட்டாதது ஏன்? தனியாரின் வருமானத்துக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளம்பர மோகத்துக்காகவும் நடத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு காட்டிய முழு அக்கறை ஏன் இந்நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை? என்பது மக்களின் கேள்வி. மெரினா கடற்கரையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் விமான சாகசத்தை பார்க்க வந்த ஐந்து பேர் பலியாகினர் 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை 7 மணி முதல் வரத் தொடங்கிய மக்கள் மதியம் ஒரு மணிக்கு விமான சாகச சிகிச்சை முடிந்ததும் கடற்கரையில் இருந்து வீடு திரும்பும் பொழுது, தடுப்பு வேலி அமைத்து உட்கார வைக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்கள் வெளியேறுவதற்கான வழிகள் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் சரியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்படவில்லை. சென்னை மாநகர காவல்துறையும் பொதுமக்கள் வெளியேறும் போது உரிய காவலர்களை பாதுகாப்பு பணியில் முறையாக ஈடுபடுத்த வில்லை.

ஏற்கனவே குடிநீரின்றி தவித்த கட்டுக்கடங்காத கூட்டம் 3 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் நின்றிருந்ததுடன், ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், மூச்சு விடுவதற்கு கூட சிரமப்பட்டு கடும் சிரமத்துக்கு ஆளாகினர். முதியவர்கள், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெற்றோர்கள் குடிநீருக்காக தவித்து அந்தப் பகுதியில் இருந்த வீடுகளில் கதவைத் தட்டி குழந்தைகளுக்கான குடிநீரையும், உணவையும் கேட்டுப் பெற்றனர்.

ராணுவ அமைச்சகம் இது குறித்து ஏற்கெனவே 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெளிவாக தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் வந்திருந்த பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. அதிகாலையில் இருந்தே கூட்டம் கூடியது. உணவுக்கான வசதியும் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. வெயிலின் தாக்கத்தாலும் குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 250-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்டவர்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் சேவை சரியான முறையில் திட்டமிடப்படவில்லை. இதனால் கூட்ட நெரிசல் காரணமாக வழி கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றியபடி வந்த ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் சைரன் ஒலித்தபடி நின்ற இடத்திலேயே நின்றன.

உடனடியாக பொதுமக்களும் போலீஸாரும் நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் வைத்து தலைக்கு மேல் தூக்கிச் சென்றனர். சில இடங்களில் மயக்கம் அடைந்த பெண்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. 27 பேர் மற்றும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இனியாவது தமிழக முதல்வர் விழித்துக் கொண்டு, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் நிர்வாக மேலாண்மை மேம்படுத்த வேண்டும்.அடித்தட்டு மக்களுடைய எண்ணங்களை, தேவைகளை, உரிமைகளை ,புரிந்து கொண்டு நிர்வாக சீர்திருத்தத்தை உருவாக்கி மக்கள் நலம் பேண வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்