சென்னை: இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
முறையான முன்னேற்பாடுகள் இல்லாததால் அவதி என புகார்: பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
» புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
» காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு
விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை வரையிலும் நெரிசல் உணரப்பட்டது. மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.
நிகழ்வு முடிந்து நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலில் நகர்ந்து செல்ல முடியாமல் தடுமாறினர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். சிந்தாதிரிப்பேட்டை யில் பைக் ஒன்று அதிக வெயில் மற்றும் இன்ஜின் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. காவல், போக்குவரத்து, ரயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள் மூலமாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதலே சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். நேரமாக நேரமாக மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. காலை 8 மணிக்கு பிறகு, செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில்உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் ஏற முடியாமல் தவித்தனர்.
இதனால், பெரும்பாலானோர் சாகச நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முடியாமல் போன நூற்றுக்கணக்கானோர் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி தண்டவாளத் திலேயே நடந்து சென்றனர். மின்சார ரயிலைப்போல், மெட்ரோ ரயில்களிலும் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் உட்பட முக்கிய மெட்ரோரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ‘க்யூஆர்’ கோடு மூலமாகடிக்கெட் எடுக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மக்களின் வசதிக்காக, வண்ணாரப்பேட்டை - ஏஜி டிஎம்எஸ் மார்க்கத்தில் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும், கூட்ட நெரிசல் தொடர்ந்தது. சில இடங்களில் எஸ்கலேட்டர்கள், ஸ்கேனர்கள் இயங்காததால் மெட்ரோ ரயில் ஊழியர்களும் ஸ்தம்பித்து நின்றனர்.
விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது, கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என அறிந்தும் அரசும், ரயில்வே துறையும் போதிய மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு, நாளை (8-ம் தேதி) தாம்பரம் விமானப் படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமான சாகசங்கள் நடைபெறவுள்ளது. இன்று ஒத்திகை நடைபெறவுள்ளது. அதற்காக, 2 நாட்களுக்கும் காலை 10.45 மணி முதல் பகல் 11 மணி வரை சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago