யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை - கலைவாணர் அரங்கத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ்ராஜ், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பங்கேற்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எண்பதுகளின் தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக இளைஞரணியைத் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கியபோது, 5 பேரை முதலில் அமைப்பாளர்களாக நியமித்தார். நான் முதலாவது! இரண்டாவது, திருச்சி சிவா. மிசா என்.சிவா என்ற பெயரை ‘திருச்சி சிவா’ என்று மாற்றியவர் தலைவர் கருணாநிதி. அப்போது நாங்கள் முப்பதுகளை தொட்ட இளைஞர்களாக இருந்தோம். இன்று எழுபதுகளைத் தொட்டும் தொய்வில்லாமல் பணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இளைஞர்களாக இருக்கிறோம். எங்களை என்றும் இளமையாக இயக்குவது, நம்முடைய கழகம். கறுப்பு சிவப்புக் கொடி. தலைவர் கருணாநிதி. இந்த மூன்றும் இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று இருந்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கக் கூடிய 5 புத்தகங்களுக்காக நம் சிவா அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.

தலைவருக்கு, எப்போதும் சிவா அவர்களின் பேச்சு என்றால் மிகவும் பிடிக்கும். மாநிலங்களவை பேச்சுகளுக்காக அடிக்கடி பாராட்டுவார். இப்படி சிறப்பான பாராட்டுகளைப் பெற்ற திருச்சி சிவா அவர்கள் எழுதியிருக்கும் நூல்களின் தலைப்பே சிவா அவர்களைப் பற்றி சொல்லும்.

‘எதிர்பாராத திருப்பம்’ - சிவாவின் சிறையைச் சொல்கிறது. ‘மேடையெனும் வசீகரம்’ - சிவாவின் மேடையைக் காட்டுகிறது. ‘கேளுங்கள் சொல்கிறேன்’ - அவரின் வாதமாக இருக்கிறது. ‘முரசொலியின் மடியில் தவழ்ந்தவை’ - அவரின் எழுத்தோவியமாக இருக்கிறது. ‘காட்சியும் கருத்தும்’ - கலை, இலக்கியமாக இருக்கிறது. அந்த வகையில், மேடை - எழுத்து - சிறை - வாதம் - கலை இலக்கியம் என்ற சிவாவின் ஐந்து முகங்களையும் வெளியிடும் மேடை இது.

சிவா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, “அரசியல்வாதிக்குள் இருக்கும் இலக்கியவாதி” என்று சொல்லுவார். அதற்கு ஏற்றாற்போல், இவை அரசியல் புத்தகங்களாக மட்டுமில்லாமல் அரசியலுக்கு வெளியில் இருப்பவர்களும் படிக்கும் இலக்கிய நூல்களாகவும் அமைந்திருக்கிறது.

நம் திருச்சி சிவாவை பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இளைஞரணியைத் தொடங்கிய காலத்தில் ஐவரில் ஒருவர். அதன்பிறகு 10 ஆண்டு காலம் இளைஞரணியின் துணைச் செயலாளர். 15 ஆண்டு காலம் மாநில மாணவரணிச் செயலாளர். இப்போது கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் என்று கழகப் பணியில் தன்னுடைய உழைப்பால் உயரங்களை அடைந்தவர்.

மக்கள் பணியைப் பொறுத்தவரை, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மூலமாக மக்களவைக்கு ஒருமுறையும், இப்போது நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமில்ல, திமுக-வின் முகமாக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதனால்தான் ஆளும் தரப்பு, “சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது” என்று அச்சம் கொள்கிறது. தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக ஏழு அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார். ஒன்பது தனிநபர் மசோதாக்களையும், இரண்டு தனி நபர் தீர்மானங்களையும் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய சாதனைகளுக்கு மகுடம் வைப்பதுதான் ‘திருநங்கைகள் உரிமைகள் மசோதா - 2014’.

45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனை. இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வுகளில் இது ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகிறது.

அதேபோல, இன்னொரு பெரிய சாதனை இன்றைக்கு சேவைத் துறைகளில் பணிபுரியும் சுமார் 80 லட்சம் பணியாளர்களின் நிலை பற்றியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்குப் பேசி, அதன் விளைவாக ஒன்றிய அரசு சமூகப் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை வகுக்க முன் வந்திருக்கிறது.

இதெல்லாம் சிவாவின் பெருமைகள் மட்டுமல்ல, சிவா மூலமாகத் திமுக அடையும் பெருமைகள். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு திருச்சி சிவா உதாரணமாக, வழிகாட்டியாக இருக்கிறார்.

‘எதிர்பாராத திருப்பம்’ என்ற புத்தகத்தில் சிவா தன்னுடைய வாழ்க்கைப் பதிவுகளைப் பதிவு செய்திருக்கிறார். மூன்று மாதத்தில் அப்பாவை இழந்து, தன்னுடைய அம்மாவின் அரவணைப்பிலே வளர்ந்து, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று திருச்சி பெரியார் கல்லூரியில் படித்தவர்.

கல்லூரிக் காலத்தில் திராவிடக் கொள்கைகள் மீது ஏற்பட்ட பற்றும், தலைவர் கருணாநிதியின் பேச்சும் அவரை அரசியல் ஆர்வம் கொண்டவராக மாற்றியிருக்கிறது. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது சென்னை சிறையில் நாங்களெல்லாம் இருந்ததுபோல் திருச்சி சிறையில் சிவா ஓராண்டு இருந்திருக்கிறார்.

சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்பில் மாநிலக் கல்லூரிக்குச் சென்று நான் தேர்வு எழுதியது போன்று, அவரும் திருச்சி பெரியார் கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுதியிருக்கிறார்.

ஒரு சராசரி இளைஞராக, உயர்கல்வி, பெரிய வேலை என்று நினைத்திருந்தவரை மிசா கைது ஒரு அரசியல் தலைவராக மாற்றியது. சிறைச்சாலை என்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நாங்கள் என்பதால்தான், யாருடைய அரட்டலுக்கும் உருட்டலுக்கும் பயப்படாமல் இன்றைக்கும் செயல்பட்டு வருகிறோம்.

இந்தப் புத்தகத்தைப் படித்தபோது சிவாவின் தாயார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. சிறையில் சிவாவைப் பார்க்க வந்த அவருடைய அம்மா சொல்கிறார்...

“பையன் சிறைக்குச் சென்றுவிட்டதால் கிண்டல் செய்கிறார்கள். என் பையன் பிக்பாக்கெட் அடித்துவிட்டுச் சிறைக்குச் செல்லவில்லை. ஒரு தலைவர் பின்னால் சென்றான். நான்தான் அவனுக்கு இந்தக் கட்சியையும் தலைவரையும் சொல்லிக் கொடுத்தேன். நான் பெற்ற நான்கு பிள்ளைகளில் ஒன்று நாட்டுக்கு என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டேன்” என்று சிவாவின் தாயார் சொல்லி இருக்கிறார். உண்மையான ‘திராவிடத்தாய்’ அவர்தான்!

இப்படி எத்தனையோ தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை இயக்கத்திற்காகத் தாரைவார்த்துக் கொடுத்ததால் வளர்ந்த இயக்கம் இது. அதனால்தான், எதிர்க்கட்சிகள் நம்மைக் குடும்பக் கட்சி என்று சொல்லும்போது எனக்குக் கோபம் வருவது இல்லை. “குடும்பம் குடும்பமாக வந்து, குடும்பம் குடும்பமாகத் துன்ப துயரங்களை அனுபவித்து, நாட்டுக்காக உழைக்கின்ற இயக்கம்தான் திமுக”

மிசா காலத்தில் மாநிலக் கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போவதாக செய்தி வந்தபோது, அதிமுக-வின் பெயரை அனைத்திந்திய அதிமுக என்று மாற்றினார்கள். அப்போது சிறையில் இருந்த சிவா, நம்முடைய ஆருயிர் அண்ணன் மறைந்த கோ.சி.மணி உடன் இது பற்றி கேட்டிருக்கிறார். அப்போது மணி அண்ணன் என்ன சொன்னார் என்றால், “எனக்குச் சட்டம் எல்லாம் தெரியாது. ஆனால் நம் கட்சி பெயர், தலைவர் கருணாநிதி இருக்கும் வரை மாறாது, மாறவே மாறாது” என்று சொல்லியிருக்கிறார்.

இரண்டு வாரத்திற்கு முன்புதான் நம் இயக்கத்தின் பவள விழாவைக் கொண்டாடினோம். 75 ஆண்டுகளாக நம் இயக்கத்தினுடைய பெயர் மாறவில்லை! கொடி மாறவில்லை! சின்னம் மாறவில்லை! நம் எதிரிகளின் வடிவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம். நாம் மாறவில்லை. நம் போராட்டமும் மாறவில்லை. இதுதான் திமுக.

அதனால்தான், பெருமையாகச் சிவா எழுதியிருக்கார், ‘தமிழனாகப் பிறந்தது சிறப்பு, கழகத்தில் பணியாற்றுவது பெருமை, கருணாநிதியின் தொண்டராய் வாழ்வது பேறு’ என்று. இவை வெறும் எழுத்தல்ல, காலத்திற்கும் நிலைத்திருக்கும் கல்வெட்டு. ஒவ்வொரு திமுக தொண்டரும் தன் இதயத்தில் எழுதி வைத்திருக்க வேண்டிய சொற்கள். தமிழை விட, கழகத்தை விட, தலைவர் கருணாநிதியை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்?

என்னைப் பற்றி அவர் எழுதும்போது, ‘கலைஞராய் வாழும் தளபதி’ என்று எழுதி இருக்கிறார். என் மீதான அன்பு மிகுதியால் அப்படி எழுதி இருக்கிறார் சிவா. என்னை 45 ஆண்டுகளாகப் பக்கத்தில் இருந்து பார்ப்பவர். “இனி இவர்தான் எங்கள் தளபதி” என்று முதலில் அறிவித்தவர் சிவாதான். அதனால் அந்தத் தலைப்பை வைத்திருக்கிறார். ஆனால், அதில் ஒரு திருத்தம் இருக்கிறது. கலைஞராய் வாழ கலைஞரால் மட்டும்தான் முடியும். என்னைப் பொருத்தவரை, “கலைஞர் வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்!”

இந்தப் புத்தகங்கள் வெளியீட்டு மூலமாக, எப்படி சிவா வசீகரிக்கும் பேச்சுக்கு சொந்தக்காரரோ, அதே மாதிரி, சொக்க வைக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர் என்று நிரூபித்திருக்கிறார்.

இந்த நூல்களில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இருக்கிறது. நம்முடைய தலைவர்களின் வரலாறு இருக்கிறது. இயக்கத்தின் தியாகம் இருக்கிறது! மொத்தத்தில், கழகத்தினர் எப்படி பேச வேண்டும், எப்படி எழுத வேண்டும், எப்படி வாதிட வேண்டும், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று வழிகாட்டும் புத்தகங்களாக இவற்றைத் திருச்சி சிவா உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

நாங்கள் இயக்கத்திற்குள் அடியெடுத்து வைத்த காலத்திலும் நம் இன எதிரிகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு பாஜக-வினர் பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவது மட்டுமல்லாமல், அதை எப்படியெல்லாம் உண்மையாக மாற்றலாம் என்று யோசித்து, வரலாறுகளை மாற்றி எழுதுகிறார்கள். அவற்றை உடைத்தெறிய இன்னும் ஏராளமான திருச்சி சிவாக்கள் இந்த நாட்டுக்குத் தேவை, இந்த இயக்கத்துக்குத் தேவை. இந்த நூல்கள் மாதிரி இன்னும் பல புத்தகங்கள் தேவை. இந்தப் புத்தகங்களை உருவாக்கித் தந்திருக்கும் நம் திருச்சி சிவாவை மீண்டும் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்!

கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல “சிவா, தான் ஐஏஎஸ் ஆக முடியவில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்” என குறிப்பிட்டார். நானும் படித்தேன். நான் அவருக்கு நிறைவாகச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஐஏஎஸ் பதவிக்கு ஓய்வு உண்டு, ஆனால் நீங்கள் கொள்கையைப் பரப்பும் திமுக எனும் மூன்றெழுத்துக்கும், நம் பயணத்துக்கும் என்றும் ஓய்வில்லை! என்று சொல்லி விடைபெறுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்