குமுளி: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கேரள போலீஸார் புதிய படகு இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டுக்கு 999 ஆண்டு குத்தகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசால் சுமார் 8,200 ஏக்கருக்கு ஆண்டு தோறும் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. பெரியாறு அணை நீர்தேக்கம், நீர்திறப்பு, கண்காணிப்பு என்று அனைத்தும் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேசமயம், அணை பாதுகாப்புக்காக கேரள போலீஸாரே இங்கு உள்ளனர். இதற்காக ஒரு டிஎஸ்பி தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் என 120 போலீஸார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், குத்தகைக்காக தமிழக அரசிடம் ஒப்படைப்பு செய்யப்பட்ட பெரியாறு அணையில் கேரள அரசின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 152 அடிக்கு தேக்கப்பட்ட நீர் 1979-ம் ஆண்டில் 136 அடியாக குறைக்கப்பட்டது. பல கட்ட நீதிமன்ற முறையீட்டுக்குப் பிறகு 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம், பேபி அணையை பராமரித்த பிறகு 152 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தமிழக நீர்வளத் துறையினர் தளவாடப் பொருட்களை அணைக்குள் கொண்டு செல்ல கேரள வனத்துறையினரும், அங்குள்ள போலீஸாரும் அனுமதிப்பதில்லை. இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தண்ணீரை தேக்குவதில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.
» தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
» 124 பேருடன் மதுரைக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - மீண்டும் சென்னையில் தரையிறக்கம்
2014-ம் ஆண்டு தமிழக பொறியாளர்கள் பயன்படுத்துவதற்காக தமிழன்னை படகு வாங்கப்பட்டது. ஆனால், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை கூறி அதனை இயக்கவிடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில், கேரள போலீஸார் தமிழக அரசின் அனுமதியின்றி பெரியாறு அணையில் புதிதாக மேலும் ஒரு படகை இயக்கியுள்ளனர். இது 150 குதிரைத்திறன் வேகம் கொண்ட அவுட்போர்டு எஞ்சின் கொண்ட படகு ஆகும்.
இதனை இடுக்கி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டி.கே.விஷ்ணுபிரதீப் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் புதிய படகை இயக்க தமிழக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படும் கேரள அரசின் செயல்பாடுகள் தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், “தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அணைக்குள் அரசின் அனுமதி பெறாமல் புதிய படகை இயக்கியது கண்டனத்துக்கு உரியதாகும். 1979-ல் தொடங்கிய அணை மீதான உரிமை பறிப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட தமிழன்னை படகை இயக்கவிடாமல் கேரள அரசு முடக்கி வைத்துள்ளது. ஆனால், கேரள சுற்றுலா மற்றும் வனத்துறை சார்பில் 8 படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. ஏற்கெனவே காவல்துறை சார்பில் 2 படகுகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதியதாக இன்னொரு படகும் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்குச் சொந்தமான அணையில் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி இதுபோன்ற அத்துமீறல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணை பாதுகாப்புக்காக தமிழக காவல் துறையினரை பணியில் அமர்த்த வேண்டும் அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும். அணை மீதான கேரள அரசின் ஆளுமையை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago