“அரசியல் கட்சித் தலைவர்களை விஜய் மதிக்க வேண்டும்” - தமிழிசை அறிவுரை

By துரை விஜயராஜ்

சென்னை: “அரசியல் கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் விஜய் மதிக்க வேண்டும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ''தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அரசியலாக்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடி அதை அவசியமாக்கியிருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்பிற்கும் மத்திய அரசின் திட்டங்கள் முழுவதுமாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது.

மத்திய - மாநில அரசுகள் கொள்கையில் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருக்க வேண்டும். இதைப் புறக்கணிப்பது நல்லதல்ல என்பதை, பிரதமர் மோடி தனது செயலால் நிரூபித்திருக்கிறார். ‘மகாத்மா காந்தியை பிடிக்காது. அவர் இந்து மதக் கொள்கையை பின்பற்றியவர்’ என விசிக தலைவர் திருமாவளவன் தனது துவேஷத்தை மிகக் கடுமையாக கக்கியிருக்கிறார். காந்தியை தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறார். சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என நான் கூறியதை, இன்னும் அதிகமாக அவர் கொச்சைப்படுத்தி மோசமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

திருமாவளவன் நாகரிகமான தலைவர் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார். விசிக கட்சியிலேயே இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். திருமாவளவன் அக்.2-க்காக அந்த மாநாட்டை நடத்தவில்லை. நிறைந்த அமாவாசை என்பதால் அந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார். பல விதங்களில் இந்து மதத்தின் நடவடிக்கைகளை திருமாவளவன் பின்பற்றுகிறார்.

பழநியில் சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால், தற்போது அதன் கோபுரம் சிதிலமடைந்திருக்கிறது. சில மாநிலங்களில் கோயில் பிரசாதத்தில் தான் பிரச்சினை என்றால், தமிழகத்தில் கோயில் கோபுரத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. அவசர அவசரமாக ஆயிரம் கும்பாபிஷேகம் நடத்தினோம் என்று சொல்வதை விட, தரம் வாய்ந்த கட்டிடக்கலை அந்த கோயிலில் பின்பற்றப்படுகிறதா என்பதையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கண்காணிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் கோயில்கள் இருந்தால், இதுபோன்ற சூழ்நிலைகள் தான் ஏற்படும்.

நடிகர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'மற்ற கட்சிகளை போல நம் கட்சி சாதாரண கட்சி அல்ல' என குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கும் கட்சி, பல மாநிலங்களை ஆளும் கட்சிகள், பல ஆண்டுகளாக பல கொள்கைகளை கொண்ட கட்சிகள் நாட்டில் இருக்கிறது. அவரது இந்த வார்த்தை தமிழக அரசியலில் ஏற்றுக்கொள்ளப்படாது.

விஜய் அவரது கட்சியை உயர்வாக சொல்லலாம். ஆனால், மற்ற கட்சிகளை சாதாரண கட்சிகள் எனச் சொல்லுவதற்கு விஜய் எந்த அளவுக்கு உயர்ந்து விட்டார் என்பது எனக்கு தெரியவில்லை. விஜய் மற்ற அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், தொண்டர்களையும் மதிக்க வேண்டும். பெரியாரையும் வணங்குவோம். அதே நேரத்தில் மறைமுகமாக கடவுளையும் வணங்குவோம் என விஜய் திமுக பாணியை பின்பற்றுகிறார். விஜய் இரட்டை வேடம் போடுகிறார். அதை அவர் கைவிட வேண்டும். திராவிட மாடல் போல, ஒரு குட்டி திராவிட மாடலை விஜய் உருவாக்குகிறார்.

சினிமாவுக்கு வருவது போல, விஜய் மாநாட்டுக்கு கூட்டம் கூடி விடும். அதில் சந்தேகம் இல்லை. மாநாட்டை விஜய் நடத்திக் காண்பித்துவிடுவார். ஆனால், கட்சியை எப்படி நடத்திக் காண்பிப்பார் என்பதைத் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திரைத்துறையினர் அடித்தட்டு மக்களை தான் குறி வைக்கிறார்கள். அவர்களை வேலைக்குச் செல்ல வேண்டாம், மாநாட்டிற்கு வாருங்கள் என சொல்வது நியாயம் அல்ல'' என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்