சென்னையில் ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிக்கான மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எழுதிய கடிதத்தில், "சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு வழங்க வேண்டும்" என்று கோரினார். இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைஅமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம்2027-ம் ஆண்டில் நிறைவடையும். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர் களிடம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

5 மொழிக்கு செம்மொழி அந்தஸ்து: மராத்தி, பாலி, பிராக்ருதம், அசாமி, பெங்காலி ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்துஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

வேளாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி: வேளாண் துறை உற்பத்தியில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமரின் ராஷ்டிரிய கிரிஷி யோஜனா (பிஎம்-ஆர்கேஒய்) திட்டத்தையும், உணவு பாதுகாப்பில் தன்னிறைவுகாண கிரிஷோன்னதி யோஜனா திட்டத்தையும் செயல்படுத்த மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.1,01,321.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் திட்டம்: நம் நாட்டில் தேவைப்படும் சமையல் எண்ணெய்யில் 50 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேஷியா, மலேசியாவில் இருந்து பாமாயிலும், ரஷ்யா, உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெய்யும், பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து சோயாபீன்ஸ் எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் அடுத்த 7 ஆண்டுகளில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் நம் நாட்டை தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கில் ரூ.10,103 கோடி மதிப்பில் தேசிய சமையல் எண்ணெய் - எண்ணெய் வித்துக்கள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2022-23-ம் ஆண்டில் நம் நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 39 மில்லியன் டன்களாக இருந்தது. இதை 2030-31-ம் ஆண்டுக்குள் 69.7 மில்லியன் டன்களாக அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 40 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்படும்.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும். இதன்படி, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,028.57 கோடி போனஸாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி: மெட்ரோ திட்டம் தொடர்பான மத்திய அரசின் ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: தங்களை நான் சமீபத்தில் சந்தித்து விடுத்த கோரிக்கை அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவாக இந்த திட்டத்தை முடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்