விழுப்புரம்: “மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (அக்.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கை விரைவில் கர்நாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார். சமூக நீதியைக் காப்பதற்கான இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கர்நாடகத்திடம் இருந்தாவது சமூக நீதிப் பாடத்தை தமிழக அரசு கற்க வேண்டும்.
தமிழகத்தின் அமைச்சரவையில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த முனைவர் கோவி.செழியன் உயர் கல்வித் துறை அமைச்சராக்கப்பட்டு இருக்கிறார். இது பட்டியலினத்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம். ஆனால், இந்த அங்கீகாரத்தை திமுக தாமாக முன்வந்து வழங்கவில்லை. இந்த அங்கீகாரத்தை வழங்கச் செய்தது பாமக. பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் திமுகவில் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் நிலையில், பழங்குடியினத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. வண்ணார், குலாலர் உள்ளிட்ட பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் திமுகவில் சட்டப்பேரவை உறுப்பினராகக்கூட வர முடியவில்லை.
பாமக-வைப் பொறுத்தவரை உழைக்கும் மக்களுக்கு இனி வரும் தேர்தல்களில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் கிராமப்புற உள்ளாட்சிகளை இணைக்க எந்தத் தேவையும் இல்லை. தமிழகத்தை நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகக் காட்டி மத்திய அரசிடம் நிதி வாங்குவதற்காகத் தான் தமிழக அரசு இதை செய்கிறது. இதனால் தமிழத மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த இணைப்பால் கிராமப்புறங்களில் சொத்துவரி, தண்ணீர் வரி போன்றவை கடுமையாக உயரும். ஆகவே, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள்ளாட்சிகளை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
» 2021க்குப் பின் 46 புதிய தொழிற்சாலைகள் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு
செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக 2,700- ஏக்கர் விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப் படவிருப்பதைக் கண்டித்து 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 454 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவிய அரசு, 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. பாமக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்கப்படுவதை பாமக எதிர்க்கவில்லை. அதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதையும், அழிக்கப்படுவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். செய்யாறு சிப்காட் வளாகத்தை மேல்மா பகுதியில் விரிவாக்கம் செய்யும் பணிகளை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மேல்மா பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மக்களுடன் இணைந்து மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை பாமக நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் கல்லணையிலிருந்து முறை வைத்து நீர் திறக்கப்படுவதால் உழவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முறை வைத்து தண்ணீர் திறக்கப்படும் போது காவிரி ஆற்றில் ஒரு வாரத்திற்கு தண்ணீர் திறக்கப்படாது. அதனால், அந்தப் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்படும். முறை வைக்காமல் எல்லா நாட்களும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் தான் சம்பா சாகுபடியை எதிர்பார்த்த அளவுக்கு மேற்க்கொள்ள முடியும்.
கர்நாடக அணைகளில் இன்று (அக்.3) காலை நிலவரப்படி 110 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இது மொத்தக் கொள்ளளவான 114.57 டிஎம்சி-யில் இது 97 சதவீதம் ஆகும். இவ்வளவு தண்ணீரை வைத்துக் கொண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க மறுக்கிறது. தமிழக அரசும் இதை வேடிக்கை பார்க்கிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஞ்சி அருகே ஆனாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் தமக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார். தன்னை ஊராட்சித் தலைவர் நாற்காலியில் அமரவிடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும் தடுக்கிறார்கள்; சாதியின் பெயரால் திட்டுகிறார்கள் என்பது தான் சங்கீதா முன்வைக்கும் குற்றச்சாட்டு.
சங்கீதாவுக்கு இத்தகைய கொடுமையை இழைத்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களும், அதிகாரிகளும் தான். சங்கீதாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது. ஆனாங்கூர் ஊராட்சியில் சங்கீதாவுக்கு உரிய அதிகாரத்துடன் செயல்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நானே அவரை அழைத்துச் சென்று ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமரவைத்து, கோப்புகளில் கையெழுத்திடச் செய்யும் இயக்கத்தை நடத்துவேன் என்று எச்சரிக்கிறேன்.
அன்றைய 32 மாவட்டங்களில் நானே நேரில் சென்று மகளிரை வைத்து மதுவிலக்கு மாநாடு நடத்தியுள்ளேன். தேசிய அளவிலும், தமிழக அளவிலும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விசிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறேன். மதுவிலக்குக்காக யார் மாநாடு நடத்தினாலும் மகிழ்ச்சிதான். மது விலக்குக்காக ஒலிக்கும் குரல்கள் அனைத்தையும் எங்கள் குரலாகவே பார்க்கிறோம். ஆனால், மது ஆலைகளை நடத்தும் திமுகவின் பிரதிநிதிகளை மேடையில் வைத்துக் கொண்டு மதுவிலக்கு பற்றி பேசுவதால் என்ன பயன்?
மதுவிலக்கு வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வேளையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி அறிவித்து விட்டாரே? அப்படியானால், மாநாடு நடத்தி என்ன பயன்? என்னைப் பொறுத்தவரை மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் சமரசமற்றதாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago