2021க்குப் பின் 46 புதிய தொழிற்சாலைகள் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும், அதன் மூலம் மாநிலத்துக்கு கிடைத்த தொழில் முதலீடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இந்நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் மாநிலத்தில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன.

நான்காம் கட்டமாக, ஜனவரி 27, 2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஐந்தாவது கட்டமாக, முதல்வர் ஸ்டாலின், 22-9-2024 அன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலை வாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளுக்குப் பயணம் செல்கிறார்கள் தொழில்கள் வரவில்லையே என்று எதிர்க்கட்சினர் பொறமையால் புழுங்குகின்றனர். அவர்கள் உண்மையை அறியாதவர்கள். மக்களிடம் தவறான தகவல்களைத் தந்து, மக்களிடம் ஆட்சிக்கு எதிராக அவதூறான கருத்துகளை விதைக்க முயல்கிறார்கள்.

அது அவர்களின் வீண் முயற்சி. “உண்மையை மறைக்க முயல்வது, விதையைப் பூமிக்குள் மறைக்க முயல்வதற்குச் சமம்” என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். அதுபோலத்தான் இவர்கள், திமுக ஆட்சியின் சாதனைகளை மறைக்க முயல்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி திறந்துள்ள தொழிற்சாலைகள் ஆட்சியின் பெருமையை உலகறியச் செய்யும் என்பது உறுதி.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-8-2024 அன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 தொழில்சாலைகளைத் திறந்து வைத்துள்ளார். அவை பின்வருமாறு:

இந்த 19 தொழிற்சாலைகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்பத்திகளைத் தொடங்கி வைத்தார்கள். இதன் மூலம் மொத்தம் 17 ஆயிரத்து 616 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டவை. இந்த 19 தொழிற்சாலைகளிலும் மொத்தம் 64 ஆயிரத்து 968 இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இவை தவிர மேலும், பல தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டு உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளன.

19 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி வைத்ததுடன், அதே நாளில் முதல்வர் ஸ்டாலின் 51,157 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தத் தொழிற்சாலைகளின் வாயிலாக, 41 ஆயிரத்து 835 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இவற்றுடன், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்காக ராணிப்பேட்டைக்கு நேரடியாகச் சென்று அங்கு சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் அடிக்கல் நாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 மார்ச் மாதம் நடைபெற்று 6 மாதங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்பது திராவிட மாடல் அரசு தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்குச் சிறிய சான்றாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியோடு ஒப்பீடு: திராவிட மாடல் அரசு புதிய புதிய தொழிற்சாலைகளை திறந்து வரும் சூழ்நிலையில் முந்தைய ஆட்சிக் காலத்தின் தொழில் வளர்ச்சி பணிகளை ஒப்பிட்டு நோக்குவது இந்த அரசின் சாதனைகளை மேலும் தெளிவுபடுத்தும். அதாவது, 2016-2021, ஆகிய 5 ஆண்டுகளில் முந்தைய ஆட்சியில், 15 ஆயிரத்து 543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு: அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால், திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் பாராட்டும் தமிழக தொழில் வளம்: ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 20232024 ஆம் ஆண்டுக்கான கள ஆய்வையும் கணக்கெடுப்பையும் நடத்தியதில் உற்பத்தி தொழில்களில் தமிழ்நாட்டில் 7.5 சதவிகித வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தமிழ்நாடு தொடர்ந்து புரிந்துவரும் சாதனைகள் தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்னும் வரலாற்றைப் பறைசாற்றும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்